தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி குஜராத், ஹரியானா, டெல்லி மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் போட்டியிட உள்ளது.

குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளில் 8 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லி மக்களவை தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் உ.பி.யில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.) மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே தொலைபேசியில் நடைபெற்ற விரிவான பேச்சு வார்த்தையை அடுத்து காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ரேபரேலி, அமேதி, கான்பூர் நகர், ஃபதேபூர் சிக்ரி, பான்ஸ்கான், சஹாரன்பூர், பிரயாக்ராஜ், மகாராஜ்கஞ்ச், வாரணாசி, அம்ரோஹா, ஜான்சி, புலந்த்ஷாஹர், காசியாபாத், மதுரா, சீதாபூர், பாரபங்கி, தியோரியா ஆகிய 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.