சென்னை: மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் மைக் சின்னம் கிடைத்துள்ளது. இந்த சின்னத்தை இன்று அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,  ‘பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மறுத்ததால் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது’ என குற்றம் சாட்டினார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.

அரசியல் கட்சிகள் தேர்தலின்போது பயன்படுத்தும் சின்னங்கள் நிரந்தரமாக பெறுவதற்கு குறைந்தபட்ச வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அதாவது, பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு (ஆர்.யு.பி.பி.) சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு, கடந்த மூன்று நிதியாண்டுகளின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகள் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.  அவ்வாறு வழங்காத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் வழங்கப்பட மாட்டாது.

மேலும்,  புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அல்லது சட்டமன்ற அல்லது பொதுத் தேர்தலில் மாநிலக் கட்சியாக மாறுவதற்கு போதுமான வாக்குகளைப் பெறாத கட்சிகள் அல்லது பதிவு செய்யப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிடாத கட்சிகள். “ஒரு மாநிலத்தின் கூறப்பட்ட சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மொத்த வேட்பாளர்களில் குறைந்தது 5% வாக்குகளாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்ற கட்சிகளுக்கு பொதுவான சின்னம் வழங்கப்படும். அதற்கும் குறைந்த வாக்குகளை பெறும் கட்சிகளுக்கு பொதுவான சின்னம் கிடைக்காது.

அதன் எதிரொலியாகத்தான், தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலின்போது, மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு பொதுவான நிரந்தர சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால்,  முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விகிதத்தில், குறிப்பிட்ட சின்னங்களை சில சிறு கட்சிகள் பெற்றுவிடுவதால், ஏற்கனவே பெற்ற கட்சிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,  நாம் தமிழர் கட்சி, மதிமுக, விசிக கட்சிகள் தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தை அணுகின. ஆனால், தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், இனிமேல் குறிப்பிட்ட சின்னங்களை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், அவர்கள் கேட்கும் சின்னங்கள் கிடைக்க வில்லை.

இதனால்தான் இந்த தேர்தலில் விசிக, மதிமுக போன்ற கட்சிகள், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து,  தங்களது கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. அந்த சின்னத்தை மற்றொரு மாநில கட்சியான கர்நாடகாவை சேர்ந்த பிரஜா ஐக்கியதா என்ற கட்சி  பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால்,  இதை ஏற்க மறுத்து, படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை ஒதுக்குங்கள்’ என கோரியது. ஆனால், தேர்தல் ஆணையம் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை. இதனால்,  மைக் சின்னத்தை  முதலில் இதை ஏற்க மறுத்த கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேறு வழியின்றி,  இன்று மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி உள்ளதுடன்,  லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய சீமான்,  சின்னம் விவசாயியாக இருப்பது பெரிதல்ல. உலகின அன்னமே விவசாயிகள் தான் என்றவர்,  முதலிலேயே சின்னம் கிடைத்திருந் தால் பாதி ஊர்களில் பிரசாரத்தை முடித்திருப்பேன் என்றவர்,   நாளை முதல் பிரசாரத்தை துவங்க உள்ளேன் என்றார்.

மேலும்,  சின்னம் என்னவென்று தெரியாமல் போட்டியிட முடியாது. கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காவிட்டாலும், மைக் சின்னத்தல் நம்பிக்கையோடு போட்டி போடுகிறோம். நாம் தமிழர் கட்சிக்கு 40 தொகுதிகளில் 40 சின்னங்களை கொடுப்பதுதான் அவர்களின் எண்ணம்.

ஒரு தனி மனிதனாக 7 சதவீத வாக்குகளை நான் பெற்றது தான் அவர்களுக்கு வியப்பைத் தருகிறது. என்னை பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என நினைத்தார்கள். பா.ஜ., உடன் கூட்டணி வைக்காததால் சின்னம் மறுக்கப்பட்டது.  அவர்களுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு சைக்கிள், குக்கர் போன்ற சின்னங்கள் கிடைத்துள்ளது. பாஜக அரசின் கீழ் இயங்கும் தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்டியவர்,  இதற்கே இப்படி பயந்தால் இந்த தேர்தலில் நான் என்ன செய்யப் போகிறேன் எனப் பாருங்கள். மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். பெரும் புரட்சியாளர்கள் தங்களின் முழக்கத்தை முன்வைத்த கருவி இது. இந்த தேர்தலில் ஒலிவாங்கி (மைக்)  சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிடுகிறது. ஜூன் 4ம் தேதி என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

இவ்வாறு சீமான் கூறினார்.