டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக  மக்களவை மற்றும் மாநிலங்ளவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் அரசியல் தலைவர்களின் மொபைல்கள், இணையதளங்கள் பெகாசஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சாட்டி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இன்று 2வது நாளாக முடக்கி வருகின்றன. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் இன்று 2வது நாளாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  இதே காரணத்தால் மாநிலங்களவையும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய 2வது நாள் தொடரிலும் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதால், அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மதியம் 2 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போதும்,   எதிர்க்கட்சிகள் பெகாசஸ், கொரோனா நிலவரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினர்.

இதையடுத்து, பெகாசஸ் குறித்து ஐ.டி. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உடனே பதில் அளிக்க வலியுறுத்தி    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மக்களவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாநிலங்களவையும்  நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.