சென்னை:
மிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.  வேட்புமனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இம்மாதம் 24-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, இப்பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் 12 ஆயிரத்து 820 பதவிகள், ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 பதவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவியிடங்கள் இத்தேர்தல் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதில், 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு உறுப்பினர், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஆயிரத்து 471 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சி தலைவர், 99 ஆயிரத்து 324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 12 மாநகராட்சிகளில் 919 வார்டு உறுப்பினர், 124 நகராட்சிகளில் 3 ஆயிரத்து 613 வார்டு உறுப்பினர், 528 பேரூராட்சிகளில் 8 ஆயிரத்து 288 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் அடங்கும்.
tnec
ஊரக உள்ளாட்சிகளில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படை இல்லாமலும் மற்ற பதவிகளுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடக்கும்.மேலும் மாவட்ட ஊராட்சித் தலை வர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் என 13 ஆயிரத்து 362 பதவியிடங்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் என ஆயிரத்து 328 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படும் என ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 26-ம் தேதி தொடங்கியது.முதல் நாளில் 4 ஆயிரத்து 748 பேரும், 2-ம் நாளில், 6 ஆயிரத்து 433 பேர், 3-ம் நாளில் 22 ஆயிரத்து 469 பேர், 5-ம் நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர், 6-ம் நாளான நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 18 பேர் என இதுவரை மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 352 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் நேற்று மனு தாக்கல் நடக்கவில்லை. இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்து மனு தாக்கலை முடித்துவிட்டன. மற்ற கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவதால், இறுதிநாளான இன்று அதிக அளவில் மனுக்கள் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது. போட்டியிட விரும்பாதவர்கள், 6-ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படும்.
முதல்கட்ட வாக்குப்பதிவு 17-ம் தேதியும் 2-ம்கட்ட வாக்குப்பதிவு 19-ம் தேதியும் நடக்கிறது. வாக்குகள் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.