உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் 6மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்!  அமைச்சர் ஜெயக்குமார்

Must read

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் இன்று நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர்,  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை  வைத்துள்ளதுடன், இன்றைக்குத் தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் அடித்துக் கொள்ளலாம். தமிழக மக்கள் திமுக அரசால் முழுமையாக மொட்டை அடிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடுமையாக சாடினார்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இன்னும் தேர்தல் தேதி மாநில அரசு அறிவிக்காமல், உச்சநீதிமன்றத்தில் மேலும் 6 மாதம் அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதையடுத்து, இன்று   உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிகுமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்,  திமுக சார்பாக கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், பாஜக சார்பாக கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுக நயினார், சங்கர், தேமுதிக சார்பாக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, வழங்கறிஞர் பாலாஜி உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் திமுகவைச் சேர்ந்த கிரிராஜன் பேசுகையில், கொரோனா சூழ்நிலையை தவிர்ப்பதற்கு அதிகளவில் வாக்குச்சாவடிகள் உருவாக்கி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் பல்வேறு பதற்றமான வாக்குச்சாவடி இருக்கும் பகுதியில் தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்திருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்,  ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நேரம் எந்த சூழலிலும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தான் இருக்க வேண்டும் என்றும் 6 மணிக்குள் வாக்குப்பதிவை முடிக்க வேணும் எனவும் வலியுறுத்தி இருப்பதாகவும், தங்களது கருத்தை, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும்,   தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி கேமரா உள்ளிட்ட போதிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளதாகவும்  வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, செய்தியாளர்கள், உள்ளாட்சி தேர்தலை நடத்த  மேலும் 6 மாதம் அவகாசம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “எங்கள் ஆட்சி பயந்துகொண்டு தேர்தலைத் தள்ளிவைப்பதாக திமுக அப்போது சொன்னது. இப்போது இவர்களும் பயத்தினால்தான் தேர்தலைத் தள்ளிப்போட முயல்கின்றனரா? என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை திமுக அளித்தது. நீட் விலக்கு, மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, முதியோருக்கு ரூ.1,500 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும், டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து என, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இன்றைக்குத் தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் அடித்துக் கொள்ளலாம். தமிழக மக்கள் முழுமையாக மொட்டை அடிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒன்று.

இவ்வாறு கூறினார்.

More articles

Latest article