சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தேர்தல் ஆணையமோ கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்தது. இதன் காரணமாக, தேர்தல் ஆணையம்மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் புகார் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் வருகிற 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன் வழக்கு விசாரணையும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.