சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 1,145 இடங்களில் வென்று ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சாதனை படைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. அmதனப்டி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதியும், 9-ந்தேதியும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. நேற்று (12ந்தேதி) வாக்கு எண்ணிக்கை தொடங்கி இன்று மதியம் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது.
இந்த தேர்தலில், போட்டியிட்ட திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் போட்டியிட்டு, 1,145 வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
தேர்தல் நடைபெற்ற 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க. வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. 7 மாவட்டங்களில் தி.மு.க. ஒட்டு மொத்த கவுன்சிலர் பதவிகளையும் தன்வசப்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 14 இடங்களையும், ராணிப்பேட்டையில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், கள்ளக்குறிச்சியில் மொத்தம் உள்ள 19 இடங்களையும், திருப்பத்தூரில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், நெல்லையில் மொத்தம் உள்ள 12 இடங்களையும், தென்காசியில் மொத்தம் உள்ள 14 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களில் தி.மு.க. 15 இடங்களையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் வென்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 28 கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 27 இடங்களையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,368 பதவிகளுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களையும், அ.தி.மு.க. 214 இடங்களையும், பா.ம.க. 45 இடங்களையும், அ.ம.மு.க. 5 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன.
சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவீத இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. பிற கட்சிகளை பொருத்தவரையில் பா.ம.க. ஓரளவு இடங்களை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.
சட்டசபை தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. அதில் கிடைத்துள்ள வெற்றி தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு உள்ளாட்சி தேர்தல் மேலும் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.