சென்னை: தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கு 3 இணையதள சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வருவாய்த்துறையில் உள்ள வருவாய் நிருவாக ஆணையரகம் மற்றும் துணை ஆட்சியர்களுக்கான பிரத்தியேக வலைதளம், கிராம நிருவாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகிய 3 இணையதள சேவைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

www.cra.tn.gov.in என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுஉள்ளது. இந்த தளத்தில், மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்வற்றின் விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இணையதளத்தில் அரசாணைகள், அரசு திட்டங்களின் விவரங்கள் பதிவேற்றப்படும். இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் எளிய முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

www.cra.tn.gov.in/tnscs என்ற என்ற இணையதளத்தில் தமிழக அரசின் குடிமைப் பணியின்கீழ் பணிபுரியும் அலுவலர்களின் நிர்வாக தேவைகளைப் பூர்த்தி செய்ய துணை ஆட்சியர்களுக்கான  பிரத்தியேகமாக  உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துணை ஆட்சியர்கள், அரசு விதிகள், சட்டங்கள், அரசால் வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணிமாறுதல் மற்றும் பணி நியமனங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ww.cra.tn.gov.in/vaotransfer இணையதளத்தில்,  கிராம நிர்வாக அலுவலர்களின் கோட்ட, வட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பணி மாறுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து, காலதாமதமின்றியும், வெளிப்படை தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று வலைதளங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதில் தலைமைச் செயலாளர் இறையண்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர ரெட்டி, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.