சென்னை: என்றும் வாழ்கிறார்! அண்ணா, இன்றும் ஆள்கிறார்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் அண்ணா புகழ் வணக்க மடல்!  என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் அண்ணா புகழ் வணக்க மடல்!
தென்னாட்டுக் காந்தி, இந்நாட்டு இங்கர்சால், கருத்துமிக்க நாடகங்களைப் படைப்பதில் தமிழ்நாடு கண்ட பெர்னாட்ஷா, மக்கள் நலன் காக்கும் கொள்கைவழிப் பயணத்தில் மற்றொரு கார்ல் மார்க்ஸ் என உலகப் பேரறிஞர்கள் – பெருந்தலைவர்களுடன் ஒப்பிடத்தக்க உன்னதத் தலைவராம், நம் இதயத்தை அரசாளும் மன்னராம், காஞ்சி தந்த திராவிடத் தலைவராம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள், பிப்ரவரி 3.
60-ஆம் அகவைகூட முழுமையாக நிறையாத நிலையில், 1969-ஆம் ஆண்டு நம்மை கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்டு, வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொள்ளச் சென்றுவிட்டார் ‘தமிழ்நாட்டு’ முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள். இனி இந்த உலகத்தை அண்ணா அவர்கள் காணப் போவதில்லை என்ற பெருந்துயரம் பேரலைகளாகப் பொங்கிட, உலகம் இதுவரை காணாத அளவில் 10 மில்லியன் மக்கள் பங்கேற்ற அவரது இறுதி ஊர்வலம், உலகச் சாதனையைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் அச்சேறியது.
நமது அன்னை நிலத்திற்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமகன். தாய்க்குப் பெயர் சூட்டிய பெருமை படைத்த தனயன். இந்தி ஆதிக்கத்திற்கு இந்த மண்ணில் இடமில்லை என்று தமிழ் – ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டிய போராளி. தமிழ் நிலத்திலும் தமிழர் மனத்திலும் ஆதிக்கம் செலுத்திய அயலவர் பண்பாடுகளை அகற்றி, சங்கத் தமிழ் இலக்கியம் காட்டும் பண்பாட்டுக்கேற்ற சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, அதனைத் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கிய கொள்கை வீரர்.
உலகம் வியக்க இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னை மாநகரில் நடத்திக் காட்டி, அன்னைத் தமிழுக்கு அணிகலன் சூட்டிய படைப்பாளி. ஏழைகளின் பசியாற்றிட – பட்டினிச் சாவைத் தடுத்திட, படி அரிசித் திட்டத்திற்கு வழிவகுத்த மேதை. பணத்தோட்டத்தில் விளைபவற்றைப் பாமரர்களும் பங்கிட்டுப் பயன் பெறுவதற்கான வழிமுறைகளை கையாண்ட மக்கள் தலைவர். ஜனநாயக நெறிமுறைகளிலிருந்து ஒருபோதும் விலகாத மாண்புமிக்கவர். எதையும் தாங்கும் இதயம் கொண்ட பெருமகன், நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது கற்கண்டுத் தமிழில் அண்ணாவைப் பற்றிக் கவிதை பாடும்போது,
பொங்கு கடல் நடையும் பூவையரின் மென் நடையும் – தன் புதுத்தமிழ் நடையில் காட்டியவன் / பொல்லாங்கு உரைப்போரை வாதத்தில் மாட்டியவன் / பொடியெடுத்துப் போடும் நேரம் – புன்னகையால் எதிரிகளைப் பொடியாக்கி வாட்டியவன்/ புழுதிக்குணம் படைத்தோரை ஓட்டியவன் / பொன்மகுடம் தமிழ்த்தாய்க்குச் சூட்டியவன்
-எனப் புகழ்ந்துரைத்தார். அவை வெறும் புகழ்ச்சி அல்ல, புதுத்தமிழில் வெளிப்பட்ட வரலாற்று உண்மை.
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஒரு சலூன் கடையில் என் இளம் வயதில் நான் தொடங்கியபோது, அதன் முதல் நிகழ்வு – முதன்மையான நிகழ்வு என்பதே பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாதான். அவருடைய மணிவிழா பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா அவர்களே பங்கேற்றிட விரும்பி, அவரது இல்லம் சென்று அழைத்திட்டேன். உடல்நலன் குன்றியிருந்த நிலையில், சிகிச்சைக்காக அவர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. விழாக்களில் பங்கேற்கும் நிலையில் அவர் இல்லை. அந்த நேரத்திலும் என் மீது அன்பு காட்டியவர். உங்களில் ஒருவனான எனக்கு ஊக்கம் தந்தவர் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் பெருந்தகை நம்மை விட்டுப் பிரிந்த நிலையில், கழகத்தையும் ஆட்சியையும் தன் தோளில் சுமக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் நம் உயிர் நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர். இயக்கத்திற்கு இலக்கணமாக ஐம்பெரும் முழக்கங்களை வகுத்தளித்தவர். அதில் முதலாவது முழக்கம்தான், அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
எதற்காக அப்படி நடந்திட வேண்டும் என்பதையும் அடுத்தடுத்த முழக்கங்ள் வழியே விளக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவதற்கும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்பதற்கும், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வதற்கும், மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநிறுத்துவதற்கும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளான நாம், நம் அண்ணா வழியில் அயராது உழைத்திட வேண்டும் என்பதை முழக்கங்களாக வலியுறுத்தினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்.
‘சொன்னதைச் செய்வோம்’ என்றவராயிற்றே அவர்! சொன்னவாறே அரைநூற்றாண்டு காலம் கழகத்திற்குத் தலைமை ஏற்று, அண்ணா வழியில் ஜனநாயக நெறியில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் அன்றாடத் தலைப்புச் செய்தியாக மட்டுமின்றி, இந்திய அரசியலையும் சுழல வைக்கக்கூடிய மகத்தான தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அண்ணா வழியில் பயணித்து, நம்மையும் பயணிக்கச் செய்து, அண்ணாவின் எண்ணங்களைத் திட்டங்களாகவும் சட்டங்களாகவும் செயல்வடிவமாக்கியவர் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். 60 வயதிற்குள் அண்ணா மறைந்தாலும், அவரது இதயம் அடுத்த அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞரின் வடிவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3-ஆம் நாளன்று, அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியை தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தினார். அலையலையாய் உடன்பிறப்புகள் பின்தொடர, அண்ணா சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து புகழ்வணக்கம் செலுத்தி, அவர் வழியிலான அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதி, தமிழினம் மீளவும், தமிழ்மொழி செழிக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் அண்ணாவின் வழியில் பயணித்தார் தலைவர் கலைஞர்.
தன் அண்ணனுக்கு அளித்த உறுதிப்படி, பேரறிஞர் அண்ணா துயிலும் இடம் தேடி, 2018 ஆகஸ்ட் 7-ஆம் நாள் நிரந்தரமாகப் பயணித்த முத்தமிழறிஞர் கலைஞர், இரவலாகப் பெற்ற அண்ணாவின் இதயத்தைத் திருப்பி அளித்துவிட்டு, அருகிலேயே ஓய்வு கொண்டு வருகிறார். 14 வயதில் தொடங்கிய அவரது பொதுவாழ்வுப் பயணம் 94 வயதில்தான் ஓய்வைக் கண்டது.
கழக உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் ஓய்வில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய முழக்கத்தின்படி, அண்ணா வழியில் அயராது நடந்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்து- ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியின் பயன்கள் கிடைத்திடவும், இந்தித் திணிப்பு உள்ளிட்ட அனைத்து வகையான ஆதிக்கத்தையும் ஜனநாயக முறையில் எதிர்கொண்டு, மாநில உரிமைகளை நிலைநாட்டி, இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பதுவே நம் கழகத்தின் கடமையாகும். அதற்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றிடுவோம். அயராது உழைத்திடுவோம்.
தமிழ்நாட்டு மக்களின் பேரன்பாலும், பெரும்பான்மை ஆதரவாலும் உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் என்ற பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். என் தலைமையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாநிலத்தின் இலச்சினையில் ‘தமிழ்நாடு அரசு’ என்றும், ‘வாய்மையே வெல்லும்’ என்றும் பொறிக்கப் பெற்றிருக்கிறது என்றால், அந்தப் பெயரைச் சூட்டி, அந்த வாசகத்தை இடம் பெறச் செய்த பெருமை பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கே உரியது.
அதனால்தான் அவர் உறுதியுடன் முழங்கினார், “வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்” என்ற பேரறிஞர் அண்ணாவின் முழக்கம் இன்றும் நம் செவிகளில் ஒலித்து, சிந்தையில் நிறைந்திருக்கிறது.
“தமிழ்நாடு வாழ்க” என்று மாநிலம் முழுவதும் முழக்கம் கேட்கிறது. அதற்கு மாற்றான குரல்கள், அனைத்துத் தரப்பு மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகி, தம்மை மாற்றிக் கொள்ளும் நல்லதொரு நிலையை நாடு காண்கிறது. அண்ணா, என்றும் நம் மனதில் வாழ்கிறார்; இன்றும் இந்த மண்ணை ஆள்கிறார்!
வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவர் அண்ணாவின் சதுக்கத்தில் அணையா விளக்கை ஏற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த இருபெரும் தலைவர்களும் ஏற்றிய இலட்சியச் சுடர் என்றென்றும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும். அந்த இலட்சியச் சுடரைக் கைகளில் ஏந்துவோம். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக்காக்கும் நல்லரசு ஒன்று அமைந்திட திராவிட இலட்சியச் சுடர் தேவைப்படுகிறது. எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவட்டும். இருள் விலகட்டும். இந்தியா விடியட்டும். பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று கழகத்தினர் திரளாகப் பங்கேற்கும் அமைதிப் பேரணி, அதற்கான தொடக்கமாக அமையட்டும்.
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவராண்டு 2054
தை 17
31-01-2023.