சென்னை: தமிழ்நாடு அரசின் நிறுவனமான டாஸ்மாக் நிறுவனம் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறது. இதனால், முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி, டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில, வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரே நிறுவனம் டாஸ்மாக்.   தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம், மதுபான கடைகளை மாநில அரசே திறந்து, மக்களை குடிகாரர்களாக்கி வருமானம் ஈட்டி வருகிறது. தினசரி பல கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனம், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ  நாட்களில் நூறு கோடி ரூபாயை கடந்து விற்பனை செய்து, லாபத்தை ஈட்டி வருகிறது.

டாஸ்மாக் மூலம் கடந்த 2017-18ம் ஆண்டு 26,797 கோடி ரூபாய் வருமானம் கிடைத்த நிலையில், 2018-2019ம் ஆண்டு 31,157 கோடியாகவும், 2019-20ம் ஆண்டில் 33,133 கோடியாகவும் இருந்தது. இது 2020 -2021ம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி ஆக உயர்ந்த நிலையில், . நடப்பு ஆண்டில் ( மார்ச் வரை ) மட்டும் ரூ.36,013 கோடி மதுபானம் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது” என்று சட்டப்பேரவையில் திமுக அரசு பெருமிதமாக கூறியது.

இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனம் முறையாக வருமான வரி கட்டவில்லை என கூறி, வருமான வரித்துறை, கடந்த 2021-22ஆம் நிதியாண்டிற்கு 7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 2016-17ஆம் நிதி ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து இதேபோன்ற வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், 2021-22ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், இரு நீதிபதிகள் அமர்வை அணுகுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித் துறை தரப்பில் 2016-17ஆம் ஆண்டில் மாநில அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் மதிப்பு கூட்டு வரியாக செலுத்திய 14,000 கோடி ரூபாய் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றும், மாநில அரசு நிறுவனங்கள் சட்டப்படி வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதிப்பு கூட்டு வரி செலுத்தியதற்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருமானவரித் துறை நோட்டீசுக்கு இரண்டு வார காலத்திற்கு தடை விதித்தும், வழக்கு குறித்து வருமானவரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.