தூத்துக்குடி:  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால், அதை விற்பனை செய்வதாக அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.

தூத்துக்கு பகுதி மக்களின் வாழ்வாதாரமாக ஸ்டெர்லைட் ஆலை இருந்து வந்தாலும், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் புகை போன்றவற்றால் அந்த பகுதி மக்கள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டனர். பலருக்கு புற்றுநோய் உள்பட பல நோய்கள் பரவியது. இதையடுத்து, ஆலையை மூட வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளாக தாமிர உற்பத்தி செய்து வந்த ஸ்டெர்லைக்கு எதிராக 2016-ம் ஆண்டு முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு போராட்டம் தீவிரம் அடைந்தது. 100 நாள் நடைபெற்ற இந்த போராட்டத்தின் இறுதி நாளில் கடும் வன்முறை வெடித்தது. காவல்துறையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து, அந்த ஆலைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்து, ஆலையை மூடியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், ஆலையை திறக்க அனுமதி மறுத்தது. இதனால், ஆலையை விற்பனை செய்யப்போவதாக கடந்த ஆண்டு வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஆலையை திமுக எம்.பி. கனிமொழி வாங்கப் போவதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், தற்போது, ஆலையை விற்பனை செய்யவில்லை என வேதாந்தா நிறுவனம் அறிவித்து உள்ளது. மேலும், ஆலையை மீண்டும் திறக்க இருப்பதாகவும், இது தொடர்பாக அந்த பகுதி மக்களிடம்  பேச்சு நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆலையை விற்பனை செய்வதாக 2022ம் ஆண்டு  ஜூன் மாதம் நாளிதழ்களில் வேதாந்தா நிறுவனம் விளம்பரம் செய்தது. 7 மாதங்களுக்கு பின்னர் அந்த முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டு விட்டு மீண்டும் ஆலையை  தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த  வழக்கு பிப்ரவரி 21-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.