ஜெய்ப்பூர்

காஷ்மீருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அறிவியல் வளர்ச்சியில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதை விட பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.  லித்தியம் வகை பேட்டரிகள் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், மின்சார வாகனங்கள், விமான உற்பத்தி, சூரிய மின் தகடுகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் லித்தியத்தின் தேவை 500 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகத் தங்கத்துக்கு இணையாக லித்தியத்துக்கு மதிப்பு அளிக்கப்படுவதால் அந்த கனிமம், ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.  லித்தியம் படிமங்கள் சிலி, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சீனா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.  இந்தியா ஆண்டுக்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான லித்தியத்தை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் பாதிக்கும் மேல் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம், சலால் ஹைமானா பகுதியில் லித்தியம் படிமம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.  மத்திய சுரங்கத் துறை அங்கு 59 லட்சம் டன் அளவுக்கு லித்தியம் இருப்பதாக அறிவித்துள்ளது. அங்கு விரைவில் லித்தியத்தை வெட்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானின் டேகானா பகுதியில் உள்ள ரேவந்த் மலைப் பகுதியில் பெருமளவில் லித்தியம் படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  மேலும் ராஜஸ்தானில் ஜெய்சல்மர், பார்மர் உள்ளிட்ட பகுதிகளிலும் லித்தியம் படிமம் இருப்பதற்காகச் சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதால் அந்த இடங்களிலும் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.