சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுபான கடைகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்போராட்டம், டிசம்பர் 31ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாக பெரும் பிரச்சினையையே ஏற்படுத்திவிட்டுள்ளது.
தமிழகத்தில் 3300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், அதாவது மொத்தமுள்ளவற்றில் பாதிக்கும்மேல், ஒரேநாளில் மூடும் கட்டாயம் ஏற்பட்டதும் முதலில் திகைத்துப்போய் கையை பிசைந்துகொண்டு நின்றது தமிழக அரசுதான். விளைவு, மறுநாளில் மதுபான கடைகள் எங்கு திறந்திருக்கிறதோ அங்கு நோக்கி படையெடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் மதுபிரியர்கள்.
ஆறாயிரத்திற்குமேல் இருந்தபோதே மதுபானங்களை விற்பதில் கூட்ட நெரிசலின்றி வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாத டாஸ்மாக் கடைகள், மூவாயிரம் சொச்சம் என்ற அளவுக்கு சுருங்கிவிட்ட பிறகு, நிலைமையை கேட்கவா வேண்டும்?
கிராமப்புற கடைகள் பெரும்பாலும் காணாமல்போய், நகரங்களிலும் டாஸ்மாக் கடைகள் அங்கொன்று இங்கொன்று என்றாகிவிட நிலைமை மோசமாகிப்போனது. திறந்திருக்கும் கடைகள்முன்பு கூட்டம் என்பதைவிட பதற்றமான பூமியாகவே மாறிவருகின்றன.
அந்த பகுதிகள். போக்குவரத்து நெரிசல், அந்த பகுதியை கடக்கமுடியாமல் பொதுமக்கள் அவதி ஒரு பக்கம், இன்னொரு பக்கம் முண்டியடிக்கும் மதுப்பிரியர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட முப்பது, நாற்பது ரூபாய் அதிகமாக பிடுங்கிய ஊழியர்களுடன் வாக்குவாதம், கிடைக்கப்பெறாதவர்களின் கெட்ட வார்த்தை அர்ச்சனைகள் என டாஸ்மாக் கடைகள் பகுதி போர்க்களமாக திகழ்கின்றன.
தமிழகத்தின் பல இடங்களில், இப்படிப்பட்ட சூழலால் கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போலீசார் வேடிக்கை பார்த்த கேவலங்களுக்கும் பஞ்சமில்லை.
சில இடங்களில் கொஞ்சம் பெரிது மனசு கொண்ட காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசைகளில் நிற்க வைக்கின்றனர்.
இப்படி மதுபானங்களை வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு நீளமான வரிசையில் குடிமகன்கள் நிற்கும் காட்சிகள்தான் கடந்த இரண்டுநாட்களாக வெளியாகிவருகின்றன. அந்த படங்களை பார்த்து ஆளாளுக்கு எள்ளி நகையாடுகிறார்கள்..
இவர்கள் வசதியாக ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள்.
டாஸ்மாக் வரிசையில் நிற்பவர் ஒன்றும் திருட்டு குடி குடிப்பதற்கு நிற்கவில்லையே..அரசாங்கமே அதிகாரபூர்வமாக விற்கிறது. தேவைப்படு கிறவர்கள் அவர்கள் காசில் வாங்கு அருந்து கிறார்கள்.
இரண்டு பெக்குக்காக பல லிட்டர் செலவுசெய்து நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் பணக்காரனின் முயற்சிக்கும் இவர்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை.. என்ன ஒரு விஷயம், அங்கே பணம் படைத்தவன் மதுவிற்காக அலைந்து பயணிப்பது, நீண்ட நேரம் செல விடுவது போன்றவை கௌரவம் என்ற பெயரில் கமுக்கமாக மறைந்துபோய்விடுகிறது. அதை யெல்லாம் தோண்டிக்கொண்டுபோனால் எங்கே போகும். விட்ட இடத்திற்கு வருவோம்.
மதுபானத்திற்கு வரிசைகளில் நிற்பவர்களை கிண்டலடிப்பவர்களில் டாப் பேட்ஸ்மேனாக இருப்பவர்கள் யாரென்று பார்த்தால், உப்புக்கு பெறாத படத்தை அடிச்சிபுடிச்சி விடியற் காலையிலேயே முதல் நாள் முதல் ஷோவுக்கு ஆயிரம், இரண்டாயிரம்னு செலவழித்துப் பார்க்கும் அறிவுச்சுடர்களாகத்தான் இருப்பார்கள்.
பத்தாயிரம் கட்டினால் பதினைந்தேநாளில் முப்பாதாயிரம் ரூபாய் பொருள் தருகிறோம் என்று இன்றைக்கு கடை திறந்தாலும் வரிசைகளில் நிற்க முண்டியடிக்கும் பேராசை மனோபாவத்தில் உள்ளவர்களும் இப்படிப்பட்ட ரகமே.
இப்படி கட்டுக்கடங்காத கூட்டம் திரளும் வகையில், கடந்த இரண்டுநாட்களாக, வாடிக்கை யாளருக்கு கௌரவமான முறையில் பொருளை விற்கத்துப்பில்லா நிலைக்கு போய்விட்டது மாநில அரசு.. அதற்காக அரசுதான் வெட்கப்படணும், அது மதுபான விற்பனை விவகாரம் என்றாலும்.
இன்னொரு விஷயத்தை எல்லோருமே மறந்தேபோயுள்ளனர். சில்லறை மதுபான விஷயத்தில் எந்த இடத்திலுமே நேர்மை என்பது இந்த அரசிடம் இல்லாதுதான் அது..
மதுபானம் என்றால் அதைப்பற்றி வாயே திறக்கக்கூடாது என்பதே, பெரும்பாலானோருக்கு இதன் பின்னால் உள்ள உளவியல் தாக்கம்.
மதுபானங்கள் விற்கப்படும் டாஸ்மாக் கடைகளில் முதலில் வாங்கிய பொருளுக்கு உரிய ரசீது தரப்படுகிறதா? யாரும் இதுபற்றி கேட்பதேயிலலை.. ரசீது கொடுக்கும் கேரளா, ஆந்திர மாநிலங்களெல்லாம் பூலோகத்தில் இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு மட்டும் சாத்தியப்படுகிறது. தமிழகம் மட்டும் தேவலோகத்தில் இருப்பதால் முடியவில்லை. அவ்வளவே..
அடுத்து, மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு விதிமுறைகள்படி தரமாக தயாரிக்கப்படு கிறதா,என்பதையெல்லாம் யாரும் சமூக அக்கறையோடு கேட்டதே கிடையாது. அரசும் தெளிவு படுத்தி பொதுவெளியில் வைக்காது. கேட்டால், அரசைவிட அரசை ஆதரிப்பவர்கள் விழுந்தடித்துக்கொண்டுவந்து, எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று சொல்வார்கள். ஆதாரங்களை கேட்டால் கடைசிவரை தரவே மாட்டார்கள்.
விருப்பப்பட்ட வகைகள், பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா? அதுவும் கிடைக்காது. ஒரு கடையில் அன்றைக்கு என்ன சரக்குகள் வந்து மொத்தமாக இறக்கப்படுகிறதோ, அதைத்தான் ஊழியர்கள் எந்திரத்தனமாய் கொடுப்பார்கள். கொஞ்சம் விளக்கம் கேட்டால் கேட்பவனை கழட்டிவிட்டுவிட்டு அடுத்த வாடிக்கையாளர் கையில் திணித்துவிடுவார்.
அப்படிகொடுக்கும்போது குவார்ட்டர் பாட்டில் என்றால் ஐந்து ரூபாய், ஆஃப் என்றால் பத்துரூபாய், அதுவே புல் என்றால் முப்பது நாற்பது.. புல் வாங்கும் வாடிக்கையாளர் இதுபற்றி வினா எழுப்பினால், நீங்க டாப்லெவல் பார்ட்டி,,இதைபோய் ‘பெரிசு படுத்திகிட்டு என்று சொல்லி அவரை முகஸ்துதியிலேயே வித்தியாசமான வித்தையால் புதைத்துவிடுவார்கள்.
வருடத்திற்கு இந்த எக்ஸ்ட்ரா தொகை மட்டும் எவ்வளவு தேறும் தெரியுமா? குறைந்தபட்சம் இரண்டாயிரம் கோடி ரூபாயாவது தேறி, கடை ஊழியர் தொடங்கி, மண்டல முதுநிலை மேலாளர்வரை என பலருக்கும் பங்கு போய்விடும் என்கிற தகவல்களெல்லாம் ஜுஜுபி விவகாரம்.
சரி இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டு அரசின் அதிகாரபூர்வமான பாருக்கு சென்றால் இன்னும் கொடுமையிலும் கொடுமையாக இருக்கும். சாக்கடை கால்வாய்க்குள் இருக்கிறோமா இல்லை கடைக்குள் இருக்கிறோமா என்று கண்டேபிடிக்கமுடியாது.
சுத்தமும் சுகாதாரமும் அப்படியொரு பரவசநிலையில் ஆனந்த தாண்டவமாடும் அரசு அனுமதிபெற்ற பார்களுக்குள்..
தமிழ்நாட்டில் காய்கறி மார்கெட், தலைகாய்ந்துபோன சிறிய உணவகங்கள் போன்றவற்றில் மட்டுமே வீராவேசமாய் புகுந்து கடமை உணர்ச்சிகாட்டி பீதிகொடுத்து பேதியை வரவழைக்கும் சுகாதார ஆய்வாளர்கள் என்ற அதிகார யோக்கிய சிகாமணிகள், எங்காவது இந்த மாதிரி பார்களை ஆய்வு செய்து சீல் வைத்த சம்பவங்களை என்றைக்காவது படித்திருக்கிறீர்களா? இருக்கவே இருக்காது.. இது தரப்புக்கும் அப்படியொரு நட்பு.
அடுத்தகட்டம், பொருட்களின் ‘’நியாயமான’’ விலை..முப்பது பைசா அடக்கவிலை கொண்ட ஒரு பிளாஸ்டிக் கிளாஸ், ஆறு முதல் எட்டு ரூபாய். ஐம்பது பைசாவுக்கு வாங்கப்படும் ஒரு வாட்டர் பாக்கெட் எட்டு ரூபாய். ஒரேயொரு ரூபாய்க்குக்கூட தேறாத சுண்டல் மற்றும் தம்மாத்தண்டு கொறித்தல் வகைகள் பத்துரூபாய்.. மற்ற பண்டங்களின் விலையெல்லாம்… அமெரிக்காவில்கூட அந்த அளவுக்கு டாப்ரேட்டில் இருக்காது.
இரவு ஒன்பது மணியானதும், இன்னொரு கட்டம் வரும். ஐந்தோ பத்தோ என கூடுதல் விலைக்கு விற்கப்படும் மதுபானங்கள், கடை நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்டு நூறுசதவீத பார் மோடுக்கு போய்விடும். விலை அதிகமில்லை, கூடுதலாக ஐம்பது சதவீதம்தான்..அதாவது 100 என்றால் 150. 200 என்றால் 300 ரூபாய். இந்த பார் மோடு உலகம் மறுநாள் மதியம் டாஸ்மாக் திறக்கிறவரை கமுக்கமாய் இயங்கிக்கொண்டிருக்கும்..
இந்த இரவு ஒன்பது மணி டூ மறுநாள் நண்பகல் வரையிலான காலகட்ட உலகில் புரளும்தொகையும் எத்தனை நூறுகோடிகள் என்பது கிம்பளம் வாங்கும் வகையறாக்களுக்கே வெளிச்சம்.
தமிழக அரசாங்கம் நடத்தும் ஒரு வியாபாரத்தில் இந்த அளவுக்கு அயோக்கியத்தனம் உலகில் எங்காவது நடக்கிறது என்று பார்த்தால் இருக்காது என்றே பதில் கிடைக்கும்.
இப்படி வருவாய்க்காக மட்டுமே அலையும் அரசு, மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு, மறுவாழ்வு, சிகிச்சைகள் போன்றவற்றில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
ஒன்று பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும். அதற்கு தற்சமயம் சாத்தியம் இல்லையென்றால் அண்டை மாநிலங்களைபோலவாவது மதுபான சில்லறை விற்பனையில் நேர்மையோடு செயல்படவேண்டும்.
மது அருந்துபவர்கள் ஏற்கனவே சமூகத்தால் படு கேவலமாக பார்க்கப்படுகின்றனர் (இதில் பணக்கார வர்க்கம் விதிவிலக்கு).. அப்படி கேவலமாக பார்க்கப்படுவர்களிடமிருந்தும் அரசும் டாஸ்மாக் அதிகாரிகளும் ஊழியர்களும் முடிந்தவரை பிடுங்கி தின்கிறார்கள் என்றால் இவர்கள் எத்தனை மடங்கு கேவலமானவர்களாக இருப்பார்கள்?
மதுவால் ஆண்கள் ஏராளமான பணத்தையும் உடல்நலத்தையும் இழக்கிறார்கள் என்பது பெண்களின் கண்ணீர். ஆனால் பணமும் உடல்நலமும் சீரழியும் விவகாரத்தில் அரசின் இப்படிப்பட்ட இன்னொரு அருவெறுக்கத்தக்க முகம் இருப்பது பெண்களுக்கு மட்டுமே மற்ற பல தரப்பினருக்கும் தெரியவேதெரியாது.