பெங்களூரு

லிங்காயத்துகள் பெண் மடாதிபதி மாதா மகாதேவி லிங்காயத்துக்களுக்கு சிறுபான்மையினர் அங்கீகாரம் வழங்க அமித்ஷா யார் என வினவி உள்ளார்.

சமீபத்தில் லிங்காயத்துக்களை தனி சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர்கள் என கர்னாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.   இதற்கான அங்கீகாரம் அளிக்கக் கோரி அவர் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.    நேற்று இந்த விவகாரத்தில் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவிக்கும் லிங்காயத்து மடாதிபதிகள் கூட்டம் ஒன்று பெங்களூருவில் நடைபெற்றது.

அப்போது அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பெண் மடாதிபதி மாதா மகாதேவி செய்தியாளர்களிடம், “லிங்காயத்துக்களை தனி சிறுபான்மை மதத்தினராக அறிவிக்கக் கோரி பல தலைவர்களுக்கு பல காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம்.   யாரும் அதற்கு செவி சாய்க்காத வேளையில் முதல்வர் சித்தராமையா அந்த அறிவிப்பை செய்தார்.   அதனால் லிங்காயத்துக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க இருக்கிறோம்.

இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள பசவ ஜெயந்தி விழா வரை நாங்கள் மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளோம்.   அதற்குள் அவர்கள் எங்களை சிறுபான்மை மதத்தினர் என அறிவித்தாக வேண்டும்.   ஏற்கனவே அமித் ஷா இப்படி ஒரு கோரிக்கை மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என பொய் கூறி உள்ளார்.

மேலும் அவ்வாறு கோரிக்கை வந்தாலும் அதை நான் அங்கீகரிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளார்.   எங்களை சிறுபான்மையினர் என அங்கீகரிக்க அமித் ஷா யார்?  அவருக்கு இந்த விவகாரத்தில் பேச எவ்விதத்தில் உரிமை உள்ளது?  இது குறித்து பிரதமர் தான் முடிவு எடுக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.