டில்லி:

பாகிஸ்தான் முடக்கப்பட்டிருந்த தனது வான்வழி பகுதியை நள்ளிரவு திறந்துள்ள நிலையில், இந்திய விமானங்கள் மீண்டும் பாகிஸ்தான் வான்வெளியில் பயணத்தை தொடங்கி உள்ளன.

காஷ்மீரின் புல்வாமா  மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடியாக  இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலக்கோட்  பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தனர்.

இதையடுத்து இரு நாடுகளுக்கு  இடையே ஏற்பட்ட பதற்றம் நீடித்த நிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.

இதன் காரணமாக கடந்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெற்ற  ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர்  மோடி, பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து மாற்று வழியாக அதிக நேரம் பயணம் செய்தார். மேலும் இந்திய விமானங்களும் பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து மாற்று வழியாகவே பயணித்து வந்தது.

இதற்கிடையில், கர்தார்பூரில் உள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலத்துக்கு செல்லும் வகையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் இருந்து செல்லும் வகையில் சிறப்பு பாதைக்கான சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து இங்குள்ளவர்கள், கர்தார்புருக்கு பயணம் மேற்கொள்வதற்கான, வழிமுறைகளை வகுக்க, இரு தரப்பு சிறப்பு குழுவினரும் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பலகட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து வந்தன. இதில், சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே  உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து,  தற்போது பாகிஸ்தான் அரசு, இந்திய விமானங்கள் தனது நாட்டு வான்வெளியில் பறக்க விடுத்திருந்த தடையை வாபஸ் பெற்றுள்ளது. இந்த வான்வழி நள்ளிரவு 12.41 மணி அளவில் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து சுமார் 140 நாட்களாக நீடித்த தடை விலகி  இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியில்  பறக்கத்தொடங்கி உள்ளன.