மும்பை: பிசிசிஐ அமைப்பால் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை தற்போது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2020ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் அவருக்கான தண்டனை நிறைவுபெறுகிறது.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது, பிசிசிஐ விதிமுறைகளுக்கு எதிராக மேட்ச் ஃபிக்சிங் நடவடிக்கையில் ஈடுபட்டார் ஸ்ரீசாந்த் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த்.

2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், செப்டம்பர் 13ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தின்போது மேட்ச் ஃபிக்சிங் நடவடிக்கையில் ஸ்ரீசாந்த் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. டெல்லி காவல்துறையால் ஸ்ரீசாந்த் மற்றும் இதர 2 ராஜஸ்தான் வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது இந்த வாழ்நாள் தடை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டதன் பேரில், தடையை வெறும் 7 ஆண்டுகளாக குறைத்து அறிவிப்பு செய்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் அடுத்தாண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் ஸ்ரீசாந்திற்கான தடை முடிவுக்கு வருகிறது.