போலி மருந்துகளை (Counterfeit Drugs) தயாரித்து விற்று வந்த 18 நிறுவனங்களின் உரிமங்களை மருந்து கட்டுப்பாடு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர்.

கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அலுவலர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் நடைபெற்ற ஆய்வில் போலியான மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளைத் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ள அதிகாரிகள் 26 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவின் மொத்த மருந்து உற்பத்தி கேந்திரமாக திகழும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட போலி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் 45 நிறுவனங்களும், உத்தர பிரதேச மாநிலத்தில் 23 நிறுவனங்களும் போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, தமிழ் நாடு உள்ளிட்ட பல இடங்களிலும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் Counterfeit Drugs தயாரிக்கும் மருந்து நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.