போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி ‘பஞ்ச்’ பேச்சு!

Must read

சென்னை,

டிகர் கடந்த 4  நாட்களாக ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று 5வது நாளாக ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற்று வருகிறது.

இன்று காலை ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசும்போது, போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பஞ்ச் டயலாக் பேசினார். இனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒருசிலரை பற்றி குறிப்பிட்டும் பேசியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றோடு ரசிகர்களுடனான முதற்கட்ட சந்திப்பு முடிவடையும் நிலையில், இன்றைய ரஜினி பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது,

நான் எது பேசினாலும் அது சர்ச்சை ஆகிறது. இல்லா விட்டால் விவாதம் ஆகிறது. எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது. அதிலும் அரசியலில் எதிர்ப்பு இல்லாமல் இருக்காது. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்.

ரசிகர்கள் மத்தியில் நான் பேசியது சமூகவலைதளங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.

ரஜினி தமிழரா என்ற கேள்வி எழுகிறது. நான் 24 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன். கடந்த 44 வருடங்களாக உங்களுடன் தான் இருக்கிறேன்.

எனக்கு பெயர், புகழ், பணம் அள்ளிக் கொடுத்து என்னை தமிழனாக்கிறது ரசிகர்கள் தான். நான் இப்போது பச்சை தமிழன்.

என்னை நீங்கள் தூக்கி எறிந்தாலும் நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன்.

என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க கூடாதா? அதற்காக நான் அரசியலுக்கு வர கூடாதா? அதற்காக வேறு யாரும் இல்லையா? என கேட்கிறார்கள். இருக்கிறார்கள்.

ஸ்டாலின் நல்ல திறமையானவர்கள், அன்புமணி நல்ல கல்வியாளர், உலகம் முழுவதும் சுற்றி வந்தவர். திருமாவளவன் தலித்துகளுக்காக போராடக் கூடியவர். சீமான் நல்ல போராளி.

ஆனால் தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் நன்றாக இல்லை. அதனை சரி செய்ய மக்கள் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும்.

தமிழகத்தில் அனைவரும் இணைந்துதான் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் சர்ச்சையாகிறது என்பதற்காக தான் பேசுவதை தவிர்க்கிறேன்.

இந்த விமர்சனங்கள் அனைத்தும் செடி வளர போடப்படும் உரம், மண்ணாக தான் பார்க்கிறேன். நம்மை எதிர்த்து நாம் வளர சிலர் உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கென தனிப்பட்ட கடமைகள், வேலைகள், தொழில் உள்ளது. உங்களுக்கும் குடும்பம், பொறுப்புக்கள் உள்ளது. அதனால் பொறுமையாக இருங்கள்.

போர் வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம். எதுவரை பொறுமையாக இருங்கள்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

More articles

Latest article