சென்னை,

ங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தற்போது நடைபெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன்  கூறினார்.

அரசுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக  அதிமுக  தொழிற்சங்கத்தினரும், உடன்பட மறுத்து போராட்டத்தில் குதிப்பதாக திமுக, கம்யூனிஸ்டு ஆதரவு தொழிற்சங்கங்களும் அறிவித்து நேற்று மாலை முதல் பேருந்துகள் இயக்கம் தடை பட்டுள்ளது.

இன்று 2வது நாளாக பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கல்லூரி, பள்ளி  மாணவ மாணவிகளும் பேருந்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  போராடும் தொழிற்சங்கங்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும், தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள் மூலம் பேருந்து  சேவையை தொடர முடிவு எடுத்திருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இது போக்குவரத்து தொழிலாளர்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு வருந்துகிறோம் என்றார்.

தற்போது தமிழகத்தில் 10 சதவீத பேருந்துகள்தான் இயக்கப்பட்டு வருகிறது. அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

அரசு எங்களுக்கு 7000 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளது. அதை உடனே வழங்க வேண்டும்.  ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தற்போது பல பேருந்துகள்  தற்காலிக ஊழியர்களைக் கொண்டு இயக்கி வருகிறார்கள். இது  தவறு. பொதுமக்களின் உயிரோடு அரசு விளையாடக் கூடாது என்று கூறினார்.

மேலும், அதிமுக தொழிசங்க நிர்வாகிகள் 2000 பேர், சங்க பணி என்ற பெயரில் ஆண்டு முழுவதும்  ஒ.டி. என கூறி  வேலையே செய்வதில்லை…. அவர்களை வைத்து  இன்று பேருந்துங்களை இயக்குங்கள் என்றும் அரசுக்கு அறிவுரை கூறினார்..