பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திராவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது.

அக்டோபர் 27ஆம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பொம்மனஹள்ளி தொழிற்பேட்டை பகுதியில் வனத்துறையினர் நான்கு இடங்களில் கூண்டுகள் அமைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் இருந்த சிறுத்தை இன்று காலை ஆனேகல் தாலுகா பொம்மனஹள்ளி குட்லு கேட் அருகே கிருஷ்ணாரெட்டி பேரங்காடி கட்டிடத்தில் நடமாடுவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி மூலம் சுட்டுப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் சிறுத்தை வனத்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தது.

அப்போது வனத்துறையினர் சுட்டதில் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டு வலையில் சிக்கியது. இதையடுத்து சிறுத்தை பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நான்கு நாட்களாக பட்டினி கிடந்துவந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தியதில் நிலை குலைந்ததாகவும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.