நுங்கம்பாக்கம் சுவாதி கொலைக்கு சினிமாவும் ஒரு காரணம் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
மூன்று நாட்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   ஆனாலும்  அருகே இருந்த வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து ரயில்வே போலீசார் கொலையாளியின் உருவப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.   மேலும் கொலையாளி வேகமாக நடந்து செல்வது போன்ற வீடியோ ஒன்றையும் காவல்துறையினர்  வெளியிட்டுள்ளனர்.
25-1435214913-lakshmi-ramakrishnan33331224-600
ரயில் நிலையத்தில் பலரது முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கொடூர கொலைக்கு பொதுமக்கள் பலர் தங்கள் கண்டணத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் சினிமாவும் இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
“சினிமாவில் கதாநாயகி தன்னைக் காதலிக்கவில்லை என்றால் கதாநாயகன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறான். இதுபோன்ற  காட்சிகளை பார்க்கும் இளைஞர்கள் மனதில் அது ஆழப்பதிந்து விடுகிறது. இதனால் தாங்கள் காதலிக்கும் பெண்கள் காதலை ஏற்க மறுத்தால் சினிமா பாணியில் அப்பெண்ணுக்கு எதிராக  வன்முறைச் செயல்களில் இறங்கி விடுகின்றனர். நாயகர்கள் பாடி ஆடும் பாடல்களும் கூட பெண்களை மிரட்டுவது போல, திட்டுவது போல  அமைக்கப்படுகிறது” என்று பலரும் சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் இந்தக் கருத்துக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். அவர் ”சினிமாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை நியாயப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் நமக்கு நடைபெறும்வரை அதனை வேடிக்கை பாராமல் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். பெண்களை மதிக்க ஆண்களுக்கும் கற்றுத்தர வேண்டும்  பெண்குழந்தைகளைப்போல ஆண் குழந்தைகளுக்கும் மரியாதையை சொல்லித்தர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.