சென்னை:

வழக்கறிஞர்கள் தினம் ஒரு திருக்குறள் படியுங்கள் என்றும் குறைந்தபட்சம் 51குரலாவது தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுரை கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் பார்கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தான் சமீபத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி செம்மல் என்பவரை விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். இவர் இலக்கிய வட்டாரங்களில் புகழ்பெற்ற பழமலை என்பவரின் மகன் என்பது அப்போது தெரிய வந்தது என்று கூறி உள்ளார்.

மேலும், செம்மல்  தனக்கு திருக்குறள் முனுசாமி எழுதிய ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளித்து, அதை படியுங்கள் என்று வலியுறுத்தியதாகவும், அப்போது தனக்கு ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஹரிபந்தாமன் மற்றும் நீதிபதி ஆர்.மாதவன் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கள் நினைவுக்கு வந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 51 திருக்குறளாவது தெரிந்திருக்க வேண்டும் என்றும்,  இன்று முதல் பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் அனைவரும் தினசரி ஒரு குரல் படிக்க வேண்டும் என்றும், இன்றுமுதல் அதற்கான ஒரு தொடக்கத்தை உருவாக்கியுள்ளேன் என்றும் கூறி உள்ளார்.

அதன்படி, இன்றைய தினம் கீழே உள்ள இரண்டு வரி திருக்குறளை மனப்பாடம் செய்தேன்…

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

விளக்கம்:

நாம் சொல்லும் சொல்லை வெல்ல வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக என்று

தமிழாசிரியர் சாலமன் பாப்பையாவில் திருக்குறள் உரையை கோடிட்டுக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடன் வழக்கறிஞர்கள் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், இன்று முதல் பார்கவுன்சிலில் மதிய இடைவேளை நேரமான 1.30 மணி அல்லது மாலை 4.45 மணி அளவில் ஒரு குரலை சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இன்றைய தினம் வழக்கறிஞர் திருவடிக்குமார், குறள் சொல்லும்  பணியை தொடங்கி உள்ளார் என்பதையும் தெரிவித்து உள்ளார்.