நாகர்கோவில்:

நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்தில் ஏறிய காவல்துறையினரிடம் டிக்கெட் அல்லது ஆவணங்களை காட்டும்படி கேட்ட பேருந்து கண்டக்டரின் முகத்தில் குத்தினர் அதில் பயணம் செய்த 2 காவல்துறையினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆயுதப்படை காவலர் இருவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று   திருநெல்வேலியிலிருந்து அரசு பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்தில் ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் சீருடையில் பயணித்தினர். பேருந்தின் நடத்துனர் ரமேஷ் ஆயுதப்படை காவலர்களிடம் டிக்கெட் அல்லது ஆவணங்களை காட்டும்படி கேட்டுள்ளார்.  ஆனால், காவல்துறையினர் இருவரும், தாங்கள் அரசு வேலைக்காகப் பயணிக்கும் வாரண்ட் உள்ளதாகக் காவலர்கள் பதிலளித்துள்ளனர். இதை யடுத்து ரமேஷ், சரி அந்த வாரண்ட்டை என்னிடம் காண்பிக்கவும் எனக் கூறியுள்ளார்.  ஆனால், காண்பிக்காமல் மறுத்ததை தொடர்ந்து வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த காவலர்கள் நடத்துநரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

இந்த தாக்குதலால், நடத்துநர் ரமேஷ் முகத்தின் கண் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை காவல்நிலையத்தில் கொண்டு நிறுத்தி புகார் கொடுத்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசனை கைது செய்தனர். பின்னர் அவர்கள்  சொந்த பிணையில் பெற்று வீட்டுக்குச் சென்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.