விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் திண்டிவனம் அருகே  தீப்பிடித்து, வெடித்து சிதறியதுர. இந்த விபத்தில் ச 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், சிவகாசியில் இருந்து தீபாவளி பட்டாசுகள் நாடு முழுவதும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இன்று காலை  சரக்கு வாகனம் ஒன்று பட்டாசுகள் ஏற்றிக்கண்டு சென்னை – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் காலை 8 மணி அளவில் வடவனூர் என்ற இடத்தில், சாலையோர பஞ்சர் கடையில் நிறுத்தி, வாகனத்தில் உள்ள பட்டாசு தீப்பிடித்தை அறியாமல், வாகனத்தில் ரேடியேட்டரில் இருந்த புகை வருவதாக எண்ணி, பஞ்சர் கடையில் தண்ணீர் கேட்டுள்ளார்.

அப்போது, சரக்கு வாகனத்தைப் பார்த்த பஞ்சர் கடைக்காரர் ஜனார்தனன் என்பவர், சரக்கு வாகனத்தின் பின்புறத்தில் தீ வருகை அறிந்து, தனது கடையில் இருந்து வாகனத்தை அப்புறப்படுத்த முயன்றார். அப்போது, சரக்கு வாகனத்தில் உள்ள பட்டாசுகள் முழுவதும் தீப்பிடித்து வெடித்து சிதறியது.

இதன் காரணமாக,  தேநீர் கடை ஒன்று முற்றிலும் சிதைந்தது.  பட்டாசு வெடிப்பின் தாக்கத்தால், அரை கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த கடைகள், வீடுகளில் கதவு ஜன்னல்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கின. அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்தது.

இந்த வெடிவிபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். உடல் உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு நிகழ்வதற்கு முன்னர் சிலரும், அதன் பிறகு சிலரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 9 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு வாகனம் சுக்கு நூறானதால், அந்த வாகனம் யாருக்குச் சொந்தம் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சரக்கு வாகனத்தின் ஓட்டுநரும், உதவியாளரும் விபத்தில் உயிரிழந்து விட்டதாகக் கூறினார். வெடி ஆலை உரிமையாளரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.