சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்குள் வர 15ந்தேதி முதல் வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக உயர்நீதி மன்ற பதிவாளர் அறிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றத்திற்குள் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வர கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், சிஐஎஸ்எப் போலீஸார் தவிர்த்து வேறு யாரும் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் காணொளி காட்சி மூலம் விசாரணைகள் நடைபெற்று வந்தன.

பின்னர் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியதால்,  வழக்கறிஞர்கள் தங்களின் சேம்பர்களுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், உயர் நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணையை வழக்கம்போல் தொடங்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, வரும் 15ந்தேதி முதல் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்திற்குள் வர அனுமதித்து உள்ளார்.

இதுகுறித்து, மெட்ராஸ் உயர்நீதிமன்ற  தலைமைப் பதிவாளர் பி.தனபால் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்கள் வரும் நவ.15-ம் தேதி முதல் அனைத்து வாயில்களிலும் அனுமதிக்கப்படுவர். வழக்காடிகளுக்கு அனுமதியில்லை. அதேநேரம் வழக்கில் தானே ஆஜராகும் மனுதாரர்கள் மட்டும் உரிய முன்அனுமதி பெற்று ஆஜராகலாம். வழக்கு விசாரணைகள் நேரடி மற்றும் காணொலி என இருமுறைகளிலும் நடைபெறும்.

வழக்கறிஞர்கள் சங்கங்கள் தங்களது நூலகங்களை திறக்கலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வழக்கறிஞர்கள் நூலகங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.