சென்னை : அ.தி.மு.க.,வில் உரிமை கோர சசிகலாவுக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்  நீதிமன்றத்தில்  தெரிவித்து உள்ளார்.

ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா மற்றும் அவரது சொந்த பந்தங்களான மன்னார்குடி மாஃபியா கும்பல்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கி, 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

இதை எதிர்த்து சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல, அதை நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இபிஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜே.ஸ்ரீதேவி முன் நடைபெற்று வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணனும்; திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத்தும் வாதாடினார். அப்போது, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதை, உச்ச நீதிமன்றமும், டில்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் கமிஷனும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நிலையில், தான் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் என்ற தவறான தகவலை, நீதிமன்றத்தில் சசிகலா தெரிவிக்கிறார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க., என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் சசிகலா இல்லை என்கிற போது, கட்சி உறுப்பினர்கள் விபரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும்படி அவர் கோருவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அ.தி.மு.க.,வில் உரிமை கோர, அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என வாதிட்டனர்.

அ.தி.மு.க., தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சசிகலா தரப்பில் வாதங்களை முன் வைப்பதற்காக, வழக்கு விசாரணை  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.