மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், அதை தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் , கள்ளச்சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது அந்த பகுதி மக்களிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்கள், கொலை சம்பவங்கள், கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி யாகி உள்ளது. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதபடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 69 பேர் பலியாகியுள்ளனர். இந்த விற்பனை காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், அங்குள்ள காவல்துறை அலுவலகம் மற்றும் நீதிமன்றம் பின்புறமே விற்பனை செய்து வந்ததாக கூறப்பட்டது. மேலும் 69 பேர் பலிக்கு காரணமான கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக பிரமுகர் என்பதுதெரிய வந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேலும், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, காவல்துறை, கள்ளச்சாராய வியாபாரிகளை வேட்டையாடினர். இதுவரை 18 பேரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே வேலைதேடும் இளைஞர்கள் இருவர், அந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தட்டிக்கேட்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில், பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரிடம் இங்கு சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்று தட்டிக்ட்டுள்ளனர். இதை வேலைதேடும் பட்டதாரி இளைஞர்கள் 2 பேர், தட்டிக் கேட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த யாராவது இங்கு சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்று கேட்டால், அவர்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதி காவல்துறையினர், கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக ஒருவரை மட்டுமே கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமினில் வெளியே வந்ததார். அவரிடம் சாராயம் விற்பனை தொடர்பாக புகார் கொடுத்தவர்கள் குறித்து காவல்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏற்கனவே கள்ளச்சராயம் விற்பனை செய்வதை கண்டித்து 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த ஹரிஷ்(25), (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி (20) ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரும் தாக்கியதுடன், அவர்களை கத்தியால் குத்தியுள்ளனர்.
கள்ளச்சாராய வியாபாரிகளின் கத்திக்குத்து சம்பவததால் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாராய வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே, கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் உறவினர்கள் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரின் வீடுகளை பொதுமக்கள் சூறையாடி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்றும், அதனால்தான், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்தது யார் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு காவல்துறையினர்தான் கூறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது