சென்னை: மே 1ந்தேதி முதல் தடுப்பூசி விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம், இதை  மத்தியஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறி உள்ளது.

தமிழகத்தில் இருந்து  45 மெட்ரிக் டன் ஆக்சிஜன்,  ரெம்டெசிவர் மருந்துகள், பிற மாநிலங்களுக்கு தமிழகஅரசின் அனுமதியின்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் குறித்து, பத்திரிகைகளில்  வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத் நீதிபதி  எம். சத்தியநாராயணன்  தலைமை நீதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதைத்தொடர்ந்து,  தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து  சூமோட்டோ  வழக்காக  விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தியது. விசாரணையைத் தொடர்ந்து ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றை வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டுத் தெரிவிக்க தமிழக தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது என அறிவுறுத்தியது.

தொடர்ந்து பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. அதன்படி விசாரணை நடைபெற்றது. அப்போது, கொரோனா  தடுப்பு மருந்தின் விலை உயர்வு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மே1ந்தேதி முதல் அரசு மருத்துவமனையில் ரூ.400ம், தனியார் மருத்துவ மனையில் ரூ.600ம் செலுத்த கூறியிருப்பது சரியல்ல என்றும், மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், பெரும்பாலோனார்ல  பணம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம் என்பதையும்  மத்தியஅரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது.