புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களை குறைப்பதற்காக, அதிகப்பட்ச சாத்தியமான தகவல்களை பொதுத்தளத்தில், அரசு, முன்னெச்சரிக்கையாக வெளியிட்டு வருகிறது என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஒரு அரசின் வெற்றி என்பது அதிகளவில் ஆர்டிஐ விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுவதில் அடங்கியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மத்திய தகவல் ஆணையத்தின் 14வது வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “குறைந்தளவில் ஆர்டிஐ விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுவதே ஒரு அரசு வெற்றிகரமாக இயங்குகிறது என்பதற்கான சாட்சி.

மாறாக, அதிகளவிலான ஆர்டிஐ விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுவதானது, அரசின் வெற்றியைக் குறிப்பதல்ல. ஆர்டிஐ விண்ணப்பங்களை பொதுமக்கள் தாக்கல் செய்யத் தேவையில்லாத வகையிலான ஒரு அமைப்பை நாங்கள் அறிமுகம் செய்ய விரும்புகிறோம். மக்கள் தங்களுடைய உரிமைகளுடன் சேர்த்து, கடமைகள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

காரணமில்லாமல் ஆர்டிஐ விண்ணப்பங்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலும், தனிப்பட்டக் காரணங்களுக்காகவும் இதைப் பயன்படுத்துதல் தவறு. அநீதியான நிகழ்வு ஏற்பட்டிருந்தால் மட்டுமே இது பயன்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.