மும்பை: மூன்று திரைப்படங்களுக்கான வசூல் தொகை ரூ.120 கோடி என்ற அளவில் உள்ளது. எனவே, நாட்டில் பொருளாதார மந்தநிலை கிடையாது என்று பிரதமர் மோடியின் அமைச்சரவை சகா என்பதை நிரூபிக்கும் வகையில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தும், அரசின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டதாகவோ அல்லது உணர்ந்ததாகவோ தெரியவில்லை.

இந்நிலையில்தான் மும்பையில் பேசிய ரவிசங்கர் பிரசாத், “கடந்த 2ம் தேதி வெளியான 3 படங்களின் வசூல் தொகை ரூ.120 கோடி அளவைத் தொட்டுள்ளது. பணவீக்கம் குறைவாக இருந்தபோதிலும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

மொத்த வருமான வரி வசூல் 2 மடங்காக அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு 20% அதிகரித்துள்ளது. 16.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மொத்த முதலீடாக இந்தியாவிற்கு வந்துள்ளது.

உலகளாவியப் பொருளாதாரம் மந்தமாக இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6%க்கும் மேல் உள்ளது. ஐ.டி. துறையில் 5.5 பேருக்கு புதிதாக பணிவாய்ப்புகள் கிடைத்துள்ளன. கடந்த இரண்டே ஆண்டுகளில் EPF கணக்குகளின் எண்ணிக்கை 2 கோடி கூடியுள்ளது. பிரதமர் மோடி நேர்மையான அரசை வழங்கி வருகிறார்” என்று பேசினார்.