தேஜ் பிரதாப் யாதவ்
தேஜ் பிரதாப் யாதவ்

பாட்னா:

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு போட்டியாக டிஎஸ்எஸ் என்ற அமைப்பை லாலு பிரசாத் யாதவ் மகன் தொடங்கியுள்ளார்.

பீகார் சுகாதார துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லால் பிரசாத் யாதவ் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் தர்மனிர்பேக்ஷா (மதசார்பற்ற) சேவாக் சங் (டிஎஸ்எஸ்) என்ற இளைஞர் அமைப்பை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு போட்டியாக தொடங்கியுள்ளார்.

பாட்னாவில் ஆதரவாளர்களுடன் யாத்திரை மேற்கொண்ட தேஜ் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘ஆர்எஸ்எஸ் மதவெறியை பரப்பி வருகிறது. நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையை டிஎஸ்எஸ் எதிர்க்கும். உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத் தொடங்கியுள்ள கலாச்சார அமைப்பான யுவ வாகினியை பீகாரிலும் கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. இதை டிஎஸ்எஸ் எதிர்கொள்ளும். அமைதி மற்றும் நல்லுறவை வளர்க்கும் வகையில் டிஎஸ்எஸ் செயல்படும்’’ என்றார்.

இது குறித்து பாஜ தலைவர் சுஷில் குமார் மோடி கூறுகையில்,‘‘ தேஜ் பிரதாப் யாதவ் முதலின் ஆர்எஸ்எஸ்.ல் இணைந்து, அந்த அமைப்பு எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை ஒரு ஆண்டுக்கு பார்க்க வேண்டும். டிஎஸ்எஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள். எனினும் முன்னதாக அவர் ஆர்எஸ்எஸ்.ல் இணைந்து அரை கால் சட்டை அணிந்து வந்தே மாதரம் என்று கோஷமிட்டு அதன் அனுபவத்தை உணர வேண்டும்’’ என்றார்.

இதற்கு தேஜ் பிரதாம் பதில் கூறுகையில்,‘‘ அரை கால் சட்டை அணிந்தவர்களுக்கு அரை அறிவு தான் இருக்கும்’’ என்றார்.