ராஞ்சி

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் செயல் இழந்து வருவதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.

 

 

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் இரு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் கடந்த 2017 டிசம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   மற்றொரு வழக்கான தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இதனால் அவர் சிறை வாசம் தொடர்ந்து வரும் நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.   அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் 6 வாரம் தள்ளி வைத்துள்ளது.,

ரிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் உமேஷ்  பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம், “லாலு பிரசாத் உடல் நிலை மோசமாகி வருகிறது.  அவருக்கு நீரிழிவு பாதிப்பு அதிகமாக உள்ளது.  அத்னால் அவருடைய சிறுநீரகம் 25% மட்டுமே செயல்பட்டு வருகிறது.  எப்போது வேண்டுமானாலும் அது செயல் இழக்கலாம் என்பதால் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து நிபுணர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.