திருவனந்தபுரம்: லட்சத்தீவில் புதியதாக கொண்டுவரப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து  மத்திய அரசு பதில் அளிக்க கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவின் சுற்றுலாத்தலங்களுள் ஒன்றான லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியாக பிரபுல் கோடா படேல்  இருந்து வருகிறார்.  இவர் சமீபத்தில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார்.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சீர்த்திருத்தங்கள் அந்த  தீவில் வாழும்  மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் என விமர்சிக்கப்படுகிறது. புதிய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ராகுல்காந்தி உள்பட அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

புதிய நிர்வாக சீர்த்திருத்தங்கள்  அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில்,  லட்சத்தீவு நிர்வாகியின் நிர்வாக சீர்த்திருத்தங்களை எதிர்த்து மலப்புரத்தை சேர்ந்த  கே.பி நவ்சாத் அலி மற்றும் கேரள மாநில காங்கிரஸ கட்சி  செயலாளர் காவரட்டியைச் சேர்ந்த முகமது சாதிக் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் புதிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மனுவுக்கு இரண்டு வாரத்திற்குள்  பதில் அளிக்க வேண்டும்  என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.