புதுடெல்லி: 
கிம்பூர் கேரி வன்முறை குறித்து  குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மைகளை விளக்குவோம் என்று  காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த தாக கூறப்பட்டது.  அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வன்முறைச் சம்பவத்தில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. காவல்துறை இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக  உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிடம் உத்தரப்பிரதேச காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு, ஆஷிஷ் மிஸ்ராவை உத்தரப்பிரதேச காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வன்முறை குறித்து  ராகுல்காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் தங்கள் கண்டுபிடித்த உண்மைகளை விரிவாக அறிக்கையாகத் தயாரித்து உள்ளனர். இந்த அறிக்கையை   ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து விரிவாக விளக்கம் அளிக்க முடிவு செய்து, அதற்காக  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.