திருச்செந்தூர்

இன்றைய சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடாகும். ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ஆம் தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் வரும் பக்தர்கள், கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோவிலின் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளி வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

இன்று மாலை இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற உள்ளது. இன்றைய சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுமார் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தவிர கடற்கரையில் தீயணைப்புப் படையினர் நிறுத்தப்பட்டு 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 12 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரசம்ஹாரத்துக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.