வரலாறு முக்கியம் அமைச்சரே…
ற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கவனித்துக்காள்பவர்கள் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும்தான். தவிர சசிகலாவின் வேறுசில உறவினர்களும் அப்போலோ வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா வெளியிட்ட பழைய அறிக்கை ஒன்றை நநினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.
சசிகலா உட்பட இவரது உறவினர்களையும் தனது போயஸ் இல்லத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா வெளியேற்றினார். பிறகு சசிகலாவை மட்டும் அழைத்துக்கொண்டார்.

சசிகலா - ஜெயலலிதா
சசிகலா – ஜெயலலிதா

அந்த சூழ்நிலையில் கடந்த 28.3.12 அன்று சசிகலா வெளியிட்ட அறிக்கை  இது:
கடந்த மூன்று மாத காலமாக பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 1984-ம் ஆண்டில் முதன் முதலாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டார். 1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன்.
அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இரவு-பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவிற்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை. போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவிற்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை.
24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவை பிரிந்து, அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன. கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது.
என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன். இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவிற்குத் துரோகம் நினைத்ததில்லை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவிற்கு எதிரான நடவடிக் கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.
இவ்வாறு அக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவிற்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை. பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை.
அக்காவிற்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா கூறியுள்ளார்.
(தகவல் நன்றி: ஏ.சங்கர்  அவர்கள்)