கடலுர்: குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, கடலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தை  அதிமுவின் ஒரு தரப்பினர்  நேற்று இரவு அடித்து நொறுக்கினர்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக சார்பில் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 10ந்தேதி வெளியிடப்பட்டது.  அதில் 171 வேட்பாளார்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி,  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை தொகுதி யின் வேட்பாளராக கடலூர் தெற்கு ஒன்றியத்தின்செயலாளரான பழனிச்சாமி  அறிவிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பு காட்டினர்.

இந்த நிலையில், நேற்று (14ந்தேதி)  மாலை திடீரென பழனிச்சாமி மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த பழனிச்சாமியின் ஆதரவாளர்கள்,  கடலூரில்  உள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் வந்து அங்கு தாக்குதலில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள நாற்காலை மேஜைகள் நொறுக்கப்பட்டதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் எம்.சி. சம்பத்தின் பிரச்சார வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் அங்கு வந்ததால், வன்முறையில் ஈடுபட்ட பழனிச்சாமி ஆதரவாளர்கள் தப்பி ஓடினர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.