போடி:

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயரிழந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து, செய்தியாளர்களிடம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ்  விளக்கினார்.

காட்டுத்தீயை கண்டு பதறியடித்து ஓடியதால்தான், பள்ளத்தில் விழுந்து 9 பேர் பரிதாபமாக உயரிழந்து உள்ளனர் என்று அவர் கூறினார்.

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் மலையேற்றம் பயற்சிக்கு சென்ற 39 பேர்  மீட்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘குரங்கணி காட்டுத்தீயில் இருந்து இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ள உள்ளதாகவும், அவர்களில் 10 பேருக்கு எந்தவித காயமும் இல்லை என்று கூறினார்.

மேலும் தீக்காயம் காரணமாக  17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அவர்,  காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் துர்திர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார்.

தீ விபத்தை பார்த்து பதற்றப்பட்டு ஓடியதால்தான் எதிர்பாராதவிதாமாக  பள்ளத்தில் விழுந்து தப்பிக்க முடியாமல் 9 பேர் உயிரி ழந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின்  சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், மீட்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம், போலீஸார், தீயணைப்பு படையினர் உடன்  இந்திய விமானப்படையின் ஹெலிக்காப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’ என்று கூறினார்.

‘போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மூவரும் நள்ளிரவு 3 மணி வரை குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர். இதன்பின், சுமார் 3.50 மணியளவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குரங்கணி வந்தடைந்தார். அவரும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.