விதார்த்

குரங்கனி காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மாணவர்கள் பலியாகியிருப்பது தமிழ்நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வனவூர் பிரபலானது, “மைனா” படத்துக்குப் பிறகுதான். இப்படத்தின் படப்படிப்பு இங்குதான் நடந்தது.

இந்த நிலையில் மைனா நாயகன் விதார்த்திடம் பேசினோம்:

“குரங்கனி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மாணவர்கள் பலியானதைக் கேள்விட்டதில் இருந்து மனதிற்கு மிகவும் கலக்கமாக இருக்கிறது. என்னவொரு அற்புதமான இயற்கை வளமிக்க பகுதி..” என்றவர் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார்.

“மைனா”வில்

பிறகு தொடர்ந்தார்:

தேனியிலிருந்து 15 கிலோ மீட்டர் போடி. அங்கிருந்து போடி – மூணாறு சாலையில் பசுமையை ரசித்தபடியே சென்றால், ஆறாவது கிலோ மீட்டரில் மூணாறு-குரங்கனி சாலைகள் பிரியும்.  அதில் குரங்கனி பாதையில் செல்ல வேண்டும்.

நம் நாசிக்குள் புகுந்த மூலிகைக் காற்றும், முகத்தை வருடும்  குளிர்காற்றும் மனதுக்குள்ளும் பரவசத்தை ஏற்படுத்தும்.

மனதைக் கவரும் மலைச்சாலை.. ஒரு பக்கம் மலைகள், இன்னொரு பக்கம் தென்னை, மாந்தோப்புகள், வயல் வெளிகள்,  பாக்கு, இலவம் தோப்புகளும் ஏராளம்.

அமலாபாலுடன் “மைனா”வில்..

குளிர் உடலுக்குள் ஊடுருவும். வழியில் இருக்கும் கொம்பு தூக்கி ஐயனார் கோயில் சாலையோர குடிசைக் கடையில் குளிருக்கு சூடான சுக்குமல்லியும், வறுக்கிரொட்டியும் கிடைக்கும்.  சாப்பிட்டால் குளிர் கொஞ்சம் அடங்கும்.

இதையெல்லாம் கடந்தால் வரும் குரங்கனி. மிகச் சிறிய  மலைகிராமம். கொட்டகுடி ஆறு அருவியாய் கொட்டி,  குரங்கனி வழியாக போடி, தேனி முல்லை பெரியாற்றில் கலக்கிறது.

அந்த ஆறும் அருவியும் நாம் தரிசிக்க வேண்டிய இன்னுமொரு அற்புதம்.

சாலை வசதி இல்லாத அந்தக் காலத்தில், கொழுக்குமலை, மூணாறு டாப் ஸ்டேஷன், குரங்கனி என மேற்குத் தொடர்ச்சி மலையில் விளையும் தேயிலை, ஏலக்காய், மிளகு, காய்கறி, பழவகைகள், டாப் ஸ்டேஷனில் இருந்து குரங்கனிக்கு ரோப்கார் மூலம் கீழே இறக்கி குதிரைகள் மூலம் போடி ரயில்வே ஸ்டேஷன் வந்து ஏற்றுமதி செய்வார்களாம்.

மலையேற்றக் குழுவினர் (கோப்புப்படம்)

தற்போது சாலை வசதி வந்த பிறகு இந்த வழியாக ரோப்கார் தேவைப்படவில்லை. காணாமல் போய்விட்டது.

ரோப்கார்  காலத்தில் இங்கு,  எம்.ஜி.ஆர். நடித்த “மலைக்கள்ளன்’ படம் இங்கு எடுக்கப்பட்டது.

குரங்கனியில் ஆறு, அருவிகளை ரசிப்பதோடு அருகில் ரசிக்கவும் வேறு ஊர்கள் இருக்கின்றன.

முதுவாக்குடி, கீழ்முட்டம், மேல்முட்டம், புல்மேட்டுச்சேரி, சென்ட்ரல் என மலை கிராமங்கள் எல்லாமே அழகுதான்.

மலையேற்றக் குழுவினர் (கோப்புப்படம்)

மைனாவுக்குப் பிறகு அழகர் சாமியின் குதிரை, தேனீர் விடுதி என அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடந்தன.

இப்படி அழகுத்தொட்டிலான குரங்கனி மலைப்பகுதியில் அடிக்கடி மலையேற்றக் குழுவினர் சென்று வருவார்கள். இதுவரை  பெரிய அளவில் விபத்தோ வேறு பிரச்சினைகளோ ஏற்பட்டதில்லா. ஆனால் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ,  9 மாணவர்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது” என்று சொல்லி நிறுத்திய விதார்த், “மைனா படப்பிடிப்பு நடந்தபோதே பார்த்தேன்.  குரங்கனி சென்று வர கடும் கட்டுப்பாடுகள். நாங்கள் எல்லோரும் தேனியில் தங்கி, அங்கிருந்து குரங்கனி சென்று வந்தோம். ஆகவே கட்டுப்பாடு சரியில்லை என்று இப்போது வரும் செய்தி எந்த அளவுக்கு சரி என தெரியவில்லை. தவிர அது பற்றி பேசும் நேரமும் இது அல்ல. தற்போது சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் அனைவரும் விரைவில் நலமடைய வேண்டும்” என்று சொல்லி முடித்தார் விதார்த்.

பேட்டி: டி.வி.எஸ். சோமு