குடந்தை நிலவரம்: கோயில் "தொகுதியை" வெல்லப்போவது யார்?

Must read

download
பொதுவாக தஞ்சை மாவட்டம் என்பது தி.மு.க.வுக்கு ஆதரவான தொகுதி என்ற பெயர் உண்டு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தபோதும், இம்மாவட்டத்தில் கும்பகோணம் தொகுதியில் வென்றது.
தற்போதைய தேர்தலில் கோயில் “தொகுதியான” கும்பகோணத்தை வெல்லப்போவது யார்?

அன்பழகன்
அன்பழகன்

தி.மு.க. சார்பாக போட்டியிட்ட அன்பழகன் வெற்றி பெற்றார். அவரே இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்.
ரத்னா
ரத்னா

அ.தி.மு.க. சார்பாக முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் முன்னாள் எம்.எல்.ஏ.வான குடுமி ராமநாதன். அவர் தனது பிரச்சாரத்தை தீவிரமாக செய்துகொண்டிருந்த நிலையில் திடுமென மாற்றப்பட்டார்.  குடந்தை நகராட்சித் தலவரான ரத்னா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பா.ம.க.,  ம.ந.கூ, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், போட்டி என்பது தி.மு.க.  – அ.தி.மு.கவுக்கு இடையில்தான்.
அ.தி.மு.க. வேட்பாளர் திடுமென மாற்றப்பட்டது அக் கட்சியினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுதும் அக்கட்சி வேட்பாளர்கள் பரவலாக மாற்றப்பட்டாலும், இங்கு அதிர்ச்சி ஏற்பட காரணம் உண்டு. முதலில் அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. குடுமி ராமநாதன், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றவர், பிராமணர்.  ஆகவேதான் இவரது மாற்றம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்த மாற்றத்துக்குக் காரணம், என தொகுதி அ.தி.மு.கவினரிடையே ஒரு காரணம் உலவுகிறது.
“சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த மன்னார்குடி திவாகரன்தான் மாற்றத்துக்குக் காரணம். கடந்த சில வருடங்களாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த இவர், இப்போது மீண்டும் “அம்மா” (ஜெயலலிதா)வின் குட்புக்கில் இடம் பெற்றிருக்கிறார். இதைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவுதான் இந்த மாற்றம்.
ராமநாதனுக்காக ரத்னா வாக்கு கேட்டபோது..
ராமநாதனுக்காக ரத்னா வாக்கு கேட்டபோது..

ஏனென்றால் குடந்தை நகராட்சித்தலவராக ரத்னா போட்டியிட வாய்ப்பு வாங்கித்தந்ததும் திவாரன்தான்” என்கிறார்கள்.
ரத்னாவுக்காக ராமனாதன்...
ரத்னாவுக்காக ராமனாதன்…

ராமநாதனுக்காக ரத்னாவும் ஓட்டு வேட்டையாடினார். இப்போது ரத்னாவுக்காக ராமநாதன் வாக்கு கேட்டு வலம் வருகிறார்.
சரி.. தி.மு.க. வேட்பாளர் அன்பழகனின் ப்ளஸ் மைனஸ் என்ன?
”தனது எம்.எல்.ஏ. நிதியை முழுமையாகப் பயன்படுத்தி பல பணிகளை செய்திருக்கிறார்.  உதாரணமாக 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை, இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவித்தது.
அதே இடத்தில் புதிதாக மருத்துவமனை கட்டிக்கொடுங்கள் என்று  அன்பழகன் கோரிக்கை வைத்தபோது,  தற்போது இயலாது என்று சொல்லிவிட்டது அரசு. பிறகு  தனது எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டித் தந்தார்.
தொகுதியில் எந்த பிரச்சினை என்றாலும் முதலில் வந்து நிற்பார். எப்போதும் அவரை அணுகலாம். முடிந்தவரை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முனைவார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்” என்று ப்ளஸ்களாகவே சொல்கிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்ட குடுமி ராமநாதன் பற்றி தொகுதியில்  பெரிய அளவில் நல்ல அபிப்பிராயம் இல்லை. “கடந்த தேர்தலில் வாக்கு கேட்ட வந்ததோடு சரி. அதன் பிறகு தற்போது மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன்தான் வெளியே தலைகாட்டினார்” என்கிறார்கள்.
அதே போல தற்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் ரத்னா பற்றியும் பெரிய அளவில் நல் அபிப்பிராயம் இல்லை. “நகராட்சித்தலைவராக இருந்தாலும், அவரது பணிகள் எதவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைத்தான் நகராட்சி கவனிக்க வேண்டும். அதைக்கூட சரிவர செய்யவில்லை” என்கிறார்கள்.
தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து தி.மு.க. வேட்பாளர் அன்பழகனிடம் பேசினோம். அவர், “என்னால் முடிந்தவரை மக்களுக்கு நன்மைகள் செய்திருக்கிறேன்.  தொகுதி பிரச்சினைக்காக சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறேன். ஆனால் பல நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக, மின் வசதியை மேம்படுத்த வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தேன்.  மேலக்காவேரி, தாராசுரம் பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்களை அமைக்க வேண்டும்.  கொட்டையூரில் புதிதாக அமைக்கப்படும் துணை மின் நிலைய பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
இந்த துணை மின் நிலையத்துக்காக  கடந்த 2011ல் சட்டசபையில் நான் பேசியபோது, “இடத்தை தேர்வு செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்  மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள். தற்போது 2016ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது இதையே நான் கேட்டபோது, “இடத்தை தேர்வு செய்துகொண்டிருக்கிறோம்” என்றுதான்  பதில் அளித்தார் மாண்புமிகு அமைச்சர். இது எல்லாமே மக்களுக்குத் தெரியும்.
ஆகவே என் பணி மீது உள்ள நம்பிக்கை, அ.தி.மு.க. அரசு செய்யத் தவறிய திட்டங்கள்.. இதையெல்லாம் கணக்கிட்டு மக்கள் எனக்கே வாக்களிப்பார்கள்” என்றார் நம்பிக்கையோடு.
மேலும், தி.மு.க. ஆட்சியைப் பிடித்தால் அன்பழகன் அமைச்சராக்கப்படுவார் என்ற பேச்சு இருப்பதும் இவருக்கு ப்ளஸ்.
அ.தி.மு.க. வேட்பாளர் ரத்னாவிடம் பேசியபோது, “மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்கள், இந்த ஆட்சியில் நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். ஆகவே மக்கள் என்னையே தேர்ந்தெடுப்பார்கள்” என்றார் சிம்பிளாக.
“குடந்தை நகரத்தில் குடிநீர், சாலை, மின்சார வசதிகள் சரிவர இல்லை என்கிறார்களே” என்றபோது, “எல்லாமே சிறப்பாக இருக்கிறது. அதுவும் மகாமகம் வந்தபோது தேவைக்கு அதிகமாகவே வசதிகள் செய்துகொடுத்துவிட்டோம்” என்றார்.
தற்போதைய நிலையின்படி, தி.மு.க. வேட்பாளர் அன்பழகனுக்கு சாதகமாகவே கும்பகோண் இருப்பது தெரிகிறது.

More articles

Latest article