கும்பகோணத்தில் பச்சிளம் பிஞ்சுகள் வெந்து மடிந்த தினம் இன்று : மக்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம்

கும்பகோணம் தனியார் பள்ளியில் தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் மறைந்த 13ஆவது நினைவு தினத்தில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதே தினத்தில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது.   அதில் 94 குழந்தைகள் மரணம் அடைந்தனர்.  அவர்களின் 13ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

விபத்தில் தன் குழந்தைகளை இழந்த பெற்றோர், தன்னார்வலத் தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் விபத்து நடந்த பள்ளி முன் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  தீவிபத்தில் உயிர் இழந்த குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து விளக்கு ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழந்தைகள் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.   இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களை செய்து படைத்து அழுதனர்.  இது அங்கு கூடியிருந்தோர் நெஞ்சை உருக்கியது.

மறைந்த குழந்தைகளின் நினைவுக்காக தீப ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது


English Summary
Kumbakonam : 13th death anniversary of fire accident which claims 94 liveves of school children