கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில்

திருப்பூர் மாவட்டத்துக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் இணைப்பாக உள்ள ஊர் கொழுமம்.

குமண மன்னன் ஆட்சி செய்த பூமி இது. இங்கே, அமராவதிஆற்றங்கரையோரத்தில் அழகுற அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோயில்.

இங்கு அருளும் சுயம்பு மாரியம்மன், இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறாள். லிங்கக்கல்லின் அடியில் ஆவுடையாரும் உள்ளது. அம்பாளுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட அம்பாளாகவே பாவிக்கப்பட்டு புடவை கட்டி அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது.

இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதனை கரையில் போட்டுவிட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல்லே வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும், மீண்டும் வலைவீச, அந்தக்கல் வந்துகொண்டே இருந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய அம்பாள், “ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான்தான்’ என்றாள். மீனவர் இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடியபோது கிடைக்கவில்லை.

ஓரிடத்தில் கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர்.மன்னரின் கோட்டை அமைந்த இடத்தில், பிறிதொரு காலத்தில் அம்மனுக்குக் கோயில் கட்டினார்களாம். அதனால் கோட்டை மாரியம்மன் எனும் திருநாமம் அமைந்தது என்கின்றனர்.

ஊரின் வடஎல்லையில் குதிரையாறும், அமராவதி ஆறும் சேரும் இடத்திற்கு அருகில் மேடான பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

அம்பாள் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து ஊரைக்காப்பதால் “கோட்டைமாரி’ எனப்படுகிறாள்.

குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் “குமணன் நகர்’ எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் “குழுமூர்’ எனவும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே மருவி “கொழுமம்’ என்றானது.

கருவறையில் அணையாவிளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியபடி அம்மன் வீற்றுள்ளாள்.

கிழக்கு நோக்கிய ஆலயத்தில் சிம்ம வாகனம், பலிபீடம், கொடிமரத்துடன் அம்மனின் அற்புதத் தரிசனம்

சித்திரைப் பெருந்திருவிழா, 22 நாள் விழாவாக இங்கே விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனைத் தரிசித்துச் செல்கின்றனர்.

ஆடி மாதத்தில் லட்சார்ச்சனை விழாவும் லட்ச தீப விழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

கண்ணில் பிரச்னை உள்ளவர்கள், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனை மனதார வேண்டிக்கொண்டால், விரைவில் கண் கோளாறுகள் யாவும் நீங்கும். மேலும் அம்மை நோய்க்கு ஆளானவர்கள் இங்கு வந்து தங்கி, பூரண நலம் பெற்றுத் திரும்புகின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கலங்கித் தவிப்பவர்கள் அம்மனைப் பிரார்த்தித்துவிட்டு, கோயிலில் உள்ள அரசமரக் கிளைகளில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். அப்படிப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

இங்கே, பூ வைத்துப் பார்க்கிற வழக்கம் உண்டு. அதாவது, அம்மனின் திருமேனியில் பூக்களை வைத்து வேண்டுகின்றனர். அவர்கள் எந்தப் பக்கம் நினைக்கிறார்களோ அந்தப் பக்கத்தில் விழுந்தால், நினைத்த காரியத்தைத் துவக்குகின்றனர். ஒருவேளை, எதிர்ப்பக்கத்தில் விழுந்தால், கொஞ்சம் தள்ளிப்போடுகின்றனர்.

குலத்தைத் தழைக்கச் செய்யும் அம்மனுக்குப் பால் குடம், தீர்த்தக் குடம் என அம்மனுக்கு நேர்த்திக்கடன்  செலுத்துவோரும் உண்டு. விவசாயம் தழைக்க வேண்டும் என்றும், மழை செம்மையாகப் பெய்யவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், காடு- கரையெல்லாம் நிறையச் செய்து விவசாயத்தைத் தழைக்கச் செய்வாளாம், கோட்டை மாரியம்மன்.