அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம்

Must read

அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம்.
முன்னொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே பாற்கடல் கடைந்து அமுதம் எடுப்பதில் போட்டி நடந்தது. அப்போது அந்த அமுதத்தை அருந்த வேண்டி தேவர்கள் இந்த உலகத்தை ஆளும் மலையாள தேவி துர்கா பகவதி பிராட்டி அம்மனை வேண்டி மலையாள தேசத்தில் யாகம் செய்தார்கள்.
யாகத்தின் போது பகவதி அம்மன் தோன்றி, தேவர்களையும் மனிதர்களையும் காப்பதற்குச் சிவனுக்கும் திருமாலுக்கும் கட்டளையிட்டாள். அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்காகச் சிவனும் திருமாலும் கிளம்பும் நேரத்தில் சிவனின் வாகனமான நந்தி, அவர்களிடம் பெருமானே! அன்னை பகவதியின் தரிசனம் உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. ஆனால் சிவ வாகனமான எனக்குக் கிடைக்கவில்லையே என மிகவும் வருந்தியது.
உடனே லட்சுமி நாராயணன்,”நந்தியே! நாங்கள் கண்ட காட்சியை நீயும் கண்டு மகிழ்வாய்” என்று கூறினார். அதைக்கேட்ட நந்தி மிகுந்த உற்சாகத்துடன் பூமியின் வெளிப்பகுதியில் கொம்பு தெரிய மாபெரும் வடிவெடுத்தது.
அதைக்கண்ட லட்சுமி நாராயணன் குறுக்கிட்டு, “நந்தீஸ்வரா, நீ சாந்தமாகி மண்டியிட்டுப் பூமியை நோக்கி உற்றுப்பார்” என்றார். நந்தியும் இந்த இடத்தில் இருந்துகொண்டு திருமால் கூறியபடி செய்தது. அப்போது சிவனுக்கும் திருமாலுக்கும் பகவதி அம்மன் காட்சி கொடுத்தது நந்திக்கும் தெரிந்தது.
நந்தி கண்ட காட்சியைப் பார்த்த சனிபகவான் மகிழ்ந்து தன்னை மறந்த நிலையில், ஒய்யாரமாகத் தனது வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்து நின்றார். மேலும்,”இந்த காட்சியைக் காணும் பக்தர்கள் நெய்விளக்கேற்றி வலது புறமாக என்னைச் சுற்றி வழிபட்டால், ஏழரை நாட்டுச் சனி, செவ்வாய் தோடம் மற்றும் சகல தோசங்களும் நீங்கி நலம் உண்டாகும்” என்றார்.
மகாகணபதி, ஐயப்பன், காவல்ராயன், கயிலைநாதர், புற்று லட்சுமி நாராயணன் என ஒவ்வொருவருக்கும் தனித் தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தில் விருச்சிக மரம் உள்ளது. இந்த மரத்தை வழிபட்டால் சிவனையே நேரில் தரிசித்த பலன் என்பது ஐதீகம். இந்தக்கோயிலை உருவாக்கிய ராமானந்த மூர்த்தி சுவாமிகள் இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
இங்கு சனிக்கிழமை தோறும் சனி யாகபூசை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து கிரக தோசங்களும் விலகி, சகல செல்வங்களும் கிடைக்கிறது எனப் பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
இங்கு கன்னிமாதிசையில் குருவும், கேதுவும், சிவனும் கூடிய கன்னி சர்ப்பம் உள்ளது. இதை வணங்குவோர்க்கு அனைத்து சுபகாரியங்களும் நடைபெறும்.
இங்குள்ள பகவதி அம்மனை செவ்வாய் தோசம் உள்ளவர்கள் வழிபட்டால் தோசம் நிவர்த்தியாகும்.
ஒவ்வொரு சித்ரா பவுர்ணமியன்றும் இங்குள்ள பகவதி அம்மனின் திருவுருவில் சாத்தப்பட்ட சந்தனத்தைப் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். பலவித மூலிகைகளால் செய்யப்பட்ட இந்த சந்தனத்தை உட்கொண்டால் பலவித நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

More articles

Latest article