அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

Must read

சென்னை:
சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில் செயல்பட்டுவரும், அண்ணா நகர் கிளப்பில் மதுபான கூடத்திற்கு அனுமதிக்கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வீட்டு வசதி வாரியம் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முதலில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது.

இதனை எதிர்த்து அண்ணாநகர் கிளப் செயளாலர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், நிலுவையில் இருந்த 52 லட்சத்து 25 ஆயிரத்து 960 ரூபாய் வாடகை பாக்கியில் 20 லட்ச ரூபாயை செலுத்துவிட்டதாகவும், இருப்பினும் மீதமிருக்கும் நிலுவைத் தொகையை செலுத்துமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கிளப் செயல்படுவதால், அதனுடைய விதிகளைதான் பின்பற்ற வேண்டுமெனவும், அதன் விதிகளை மீறி மனுதாரர் எந்த அனுமதியும் கோர முடியாது என தெரிவித்துள்ளார். அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் கிளப்பை அப்புறப்படுத்தலாம் எனவும், பார் செயல்படுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், 7 கிரவுண்ட்டில் செயல்பட்டு வரும் கிளப்புக்கு வாடகையாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுவதாகவும், தற்போதைய சந்தை மதிப்புப்படி தகுந்த வாடகையை நிர்ணயிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதால் அதற்கு ஏற்படும் வருவாய் இழப்பு தமிழக அரசுக்கான வருவாய் இழப்பு என தெரிவித்துள்ள நீதிபதி, நிலுவை வாடகையை செலுத்த தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கையை கிளப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

நியாயமான வாடகையை நிர்ணயித்தும், நிலுவையில் உள்ள வாடகை தொகையை கணக்கிட்டும் அதனை 30 நாட்களில் கிளப் நிர்வாகத்திற்கு அனுப்ப தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த கடிதம் கிடைத்ததில் இருந்து நான்கு வாரங்களுக்குள் நிலுவை தொகையை செலுத்த வேண்டுமென கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு செலுத்தவில்லை எனில் கிளப் -பை காலி செய்வது, நிலுவை தொகை மற்றும் அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

More articles

Latest article