கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள், அங்கு சில இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை மற்றம் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், அந்த காரை ஓட்டி வந்த முபின் என்பவர் உயிரிழந்த நிலையில், முதலில் விபத்து என கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அது தீவிரவாதச் செயல் என்பது தெரியவந்தது. மேலும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது ஜமேஷா முபின் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவத்தை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இதுவரை 15 பேரைக் கைது செய்துள்ளனர். இதனிடையே அவ்வப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாட்ஷா உமரி, சையது அப்துல் ரகுமான் உமரி ஆகிய 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து கோவைக்கு இன்று அழைத்து வந்தனர். தொடர்ந்து கோவையில் உள்ள இஸ்லாமிக் தொழில்நுட்ப நிறுவனம், குனியமுத்தூர் அரபிக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு நால்வரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படு கிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. இதையொட்டி, அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]