உலகின் முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. கூழாங்கல் படத்துக்கு Pebbles என சர்வதேச பெயர் அளித்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தப் பெயரில்தான் கூழாங்கல் திரையிடப்படுகிறது.

இந்தப் படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெற்றுள்ளது.

பின்லாந்தில் மிட்நைட் சன் திரைப்பட விழா மிக முக்கியமானது. இந்த வருடம் இவ்விழா ஜுன் 17 (நாளைமுதல்) ஜுன் 24 வரை நடைபெறுகிறது. இதில் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

அதேபோல் லண்டனில் சர்வதேச திரைப்பட விழா இந்த வருடம் ஜுன் 17 (நாளை முதல்) ஜுலை 4 வரை நடக்கிறது. இதில் முதலாவதாக 23 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சினி லூமியர் திரையரங்கிலும், 30 இரவு 8.30 மணிக்கு ரிச் மிக்ஸ் திரையரங்கிலும் கூழாங்கல் திரையிடப்படுகிறது.