கோயமுத்தூர்: கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்குநாடு என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், மத்தியஅரசை ஒன்றிய அரசு என்றம், தமிழகத்தை தமிழ்நாடு என்றும் அழைத்து வருகிறது. மத்தியஅரசை ஒன்றியஅரசு என்று கூறுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மண்டலத்தில், திடீரென கொங்கு நாடு என்ற பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியாக பாஜக இருப்பதாக கூறப்படுகிறது. மத்தியஅரசை திமுக அரசு பிரித்தாழும் நோக்கில் ஒன்றியது என்று அழைப்பதால், கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என ஒரு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கொங்கு நாடு தனி மாநிலமாக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்குநாடு என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்., பல மாநிலங்களை பிரித்து இரண்டாவது மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து, கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்கு நாட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதனால், இங்குள்ள மாவட்டங்கள் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும். சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பல மடங்காக உயரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.