சென்னை: மேகதாது அணை கட்ட மத்தியஅரசு அனுமதிவழங்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  தமிழ்நாடு  அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே கர்நாடக மாநித்தில், மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில அரசு முரண்டு பிடித்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான அனுமதிகள் எதையும் வழங்கக் கூடாது என மத்திய அமைச்சரை நேரடியாக சந்தித்து ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. . தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மேகதாது அணை கட்டும் நடவடிக்கை தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என எடியூரப்பாவுக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இதையடுத்து, மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

இந்த நிலையில்,  மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தின் முயற்சிகளை முறியடிக்க சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து, மேகதாது அணை கட்ட மத்தியஅரசு எந்தவொரு அனுமதியும் வழங்கக் கூடாது ஒருமனதாக அனைத்து கட்சி கூட்டத்தில் 3  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தில், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சியினரும் கையொப்பமிட்டனர்.

3 தீர்மானங்கள் விவரம்:

1) உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது.

2) இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

3) தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.’எனத் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.