சென்னை:  ஐஐடி இயக்குநர் வி.காமகோடியின் கோமியம் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர்.

இந்த நிலையில்,  கோமியம் குறித்து நான் கூறியது அனைத்தும் உண்மையே.  கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.  இதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆராய்ச்சி கட்டுரைகளில் இதுதொடர்பான தகவல்கள் உள்ளன, விரும்பும் பேராசிரியர்கள் அதுகுறித்து ஆய்வு செய்யலாம் என  ஐஐடி இயக்குநர் காமகோடி பதில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15ந்தேதி அன்று மாட்டுப் பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, நிகழ்ச்சியில்  பேசும்போது, ‘‘மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.  அதாவது, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார்.

 “எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக அமைச்சர்கள், கட்சியினர் கடும் கண்டனடங்களை தெரிவித்தனர். காமகோடி படித்த முட்டாள் என கூறி விமர்சித்தனர். மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அண்ணாமலை, ஐஐடி இயக்குனர் காமகோடி ஒரு வகுப்பறையில் வகுப்பு எடுத்து நீங்க குடிங்க என்று சொல்லவில்லையே. அவரின் தனிப்பட்ட கோட்பாட்டை சொல்கிறார். இதிலும் அரசியலாக்க நினைத்தால், அந்த மனிதர் எதற்காக இத்தனை வேலைகளை செய்கிறார் என்பதை மறந்து ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அரசியல் செய்கிறார்கள் என கூறினார்.

காமகோடியின் கருத்தை  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் கடுமையாக விமர்சனம்  செய்திருந்தார்.  ‘அறிவியல்பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்ததில்லை என உறுதியாக நம்பப்படுகிற நிலையில், அதற்கு விரோதமாக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரே பேசியிருப்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவரை போன்றவர்கள் இப்பொறுப்பில் நீடிப்பது அங்கே படிக்கிற மாணவர்களின் எதிர்காலத்திற்கே உகந்ததல்ல’ என  கூறியிருந்தார்.

அதுபோல,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ‘ஐஐடி இயக்குநரின் கோமியம் குறித்த பேச்சு மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். கோமியம் உடல் நலத்துக்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை உடனடியாக நீக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி மாணவரணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் ஆகியோரும் காமகோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தனது நிலையில் உறுதியாக உள்ள ஐஐடி இயக்குனர் காமகோடி, கோமியம் சர்சைக்கு விளக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர்,   ‘‘கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.  ஆராய்ச்சி கட்டுரைகளில் இதுதொடர்பான தகவல்கள் உள்ளன. அத்தகைய ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.

கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான பண்புகள் நிறைய உள்ளன என்பது குறித்து அமெரிக்காவின் நேச்சர், என்ஐஎச் ஆராய்ச்சி கட்டுரைகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. தற்போது கோமியம் தொடர்பாக பெரிய அளவில் ஆர்வம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்.  தற்போது, இயற்கை மருத்துவமுறை மிகவும் பிரபலமாகி வருகிறது என்றவர்,   ஐஐடியில் மருத்துவ தொழில்நுட்பத்துறை இயங்கி வருகிறது. எந்த பேராசிரியராவது கோமியம் குறித்து ஆராய்ச்சி செய்ய விரும்பினால் தாராளமாக அவர்கள் ஆராய்ச்சி செய்யலாம்’’ என்றார்.