சேலம்,

கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் காரணமாக தனது தம்பியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர் என்றும், இந்த கொலையில் முதல்வர்மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரது அண்ணன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜின் விபத்து குறித்து அவரது  அண்ணன் தனபால் புகார் கூறியுள்ளார்.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி யாக சந்தேகிக்கப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஆனால் இது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்று கனகராஜின் அண்ணன் தனபால் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கனகராஜ் செயல்பட்டுள்ளார் என்று போலீசார் கூறிய நிலையில், விபத்தில் கனகராஜ் பலியானார்.

அவரது மரணம்  மர்ம மரணமாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனகராஜின் மரணம் விபத்து கிடையாது. இது திட்டமிட்ட கொலை என்று அவரது அண்ணன் தனபால் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எங்களது குடும்பமும்,  எடப்பாடி பழனிச்சாமி குடும்பமும் பங்காளிகள். கடந்த  2008ம் ஆண்டு கடைசியில்தான்  எனது தம்பி கனகராஜ் ஜெயலலிதாவின்  போயஸ் கார்டனில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.

அவர் ஜெயலலிதாவுடன் கொடநாடு மற்றும் போயஸ் தோட்டத்திலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த . 2 ஆண்டுக்கு முன்பு, கலைவாணி என்ற பெண்ணை கனகராஜ், காதல் திருமணம் செய்தார்.  தற்போது அவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில்  கடந்த 2012ம் ஆண்டு கனகராஜ் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்தார். இதற்கு காரணம்  எடப்பாடி பழனிசாமிதான்.

அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார். ஏப்ரல் 27ம் தேதி மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊர் வந்த கனகராஜ், விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து  விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அங்கு விபத்து நடப்பதற்கான வாய்ப்பே இல்லை. அது திட்டமிட்ட கொலை என்று கூறினார். எனது தம்பியின் மரணத்தின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக சந்தேகம் உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் தனபால் கூறியுள்ளார்.